அண்ணா குறித்து அவதூறு... இந்திக்கு 'ஜால்ரா'.. கல்விக்குழுவில் இருந்து பத்ரி சேசாத்திரி அதிரடி நீக்கம்
சென்னை: சமீப காலமாக தமிழ் மொழி குறித்தும் திராவிடம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்த வலதுசாரி கருத்தியலாளர் பத்ரி சேசாத்திரி தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவர் கூறியிருந்த கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் பேரறிஞர் அண்ணாவை அவர் அவதூறாக பேசியிருந்தது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.

வலதுசாரி
வலதுசாரி ஆதரவாளரான பத்ரி சேசாத்திரி ஊடக விவாதங்களில் அவ்வப்போது பங்கேற்று வந்திருக்கிறார். இந்நிலையில் அண்மை காலமாக அவர் சமூக வலைத்தளங்களில் எழுதி வரும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதனையடுத்து தமிழ் குறித்து அவர் தனது டிவிடர் பக்கத்தில் "இந்தியில் ஐம்பெருங் (ஆனால் இரண்டுதான் தரம், இரண்டு காணோம், ஒன்று சுமார்) காப்பியங்கள் மாதிரி கிடையாது. பிற்கால மொழி. ஆனால் அந்த வழியில் போனால், சமஸ்கிருதத்தில் இருக்கும் இலக்கியங்களில் ஒரு துளிகூடத் தமிழில் கிடையாதே? அந்த அடிப்படையில் இந்தியாவில் வேறு எந்த மொழியும் நிற்காதே?

இந்தி
இலக்கியம் இலக்கணம், காப்பியம், நாடகங்கள், கணிதம், வானியல், ரசாயனம் முதற்கொண்டு சமஸ்கிருதத்தில் இருப்பதுடன் தமிழை ஒப்பிடவே முடியாதே? அப்படிப் பார்த்தால் ஆங்கிலத்தில் இன்று இருக்கும் எதனுடனும் எந்த இந்திய மொழியையும் (தமிழ் உட்பட) ஒப்பிட முடியாதே?" என்று பதிவிட்டிருந்ததாக ஸ்கிரீன் ஷாட்கள் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கின. மட்டுமல்லாது இந்தியில் இருக்கும் சில நூல்களை பட்டியலிட்டு அண்ணா சொன்னதை போல 'இந்தி' ஒன்றும் மூன்று மாதங்களில் கற்றுக்கொண்டுவிடுகிற மொழியல்ல என்றும் கூறியிருந்தார்.

அவதூறு
மேலும், அண்ணா குறித்து அவதூறு பரப்பும் விதத்தில் பதிவிட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பத்ரி தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுத்து இக்குழுவிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன. மேலும் அவர் இயக்கி வரும் 'கிழக்கு பதிப்பகத்தின்' புத்தகங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் டிவிட்டரில் பலர் வலியுறுத்தினர்.

நீக்கம்
இதன் தொடர்ச்சியாக, 'சுகன்யா புத்தக நிலையத்திலிருந்து' கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் அகற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது அப்புத்தக விற்பனை நிலையம் கூறியிருந்தது. இந்த சர்ச்சை கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைத்தளங்களில் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்நிலையில் பத்ரி சேசாத்திரி தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக திமுக எம்பி செந்தில் குமார் கூறியுள்ளார். இது தொடர்பான அரசின் உத்தரவு நகலையும் அவர் பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications