சென்னையில் ஒரே நாளில் 90 லட்சம் சம்பாத்தியம்.. தங்க நகை அடகில் 'மாற்றி' யோசித்த வங்கி ஊழியர்கள்
சென்னை: சென்னை சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலையை சேர்ந்த சுலைமான் என்பவருக்கு கிண்டியில் உள்ள கத்தோலிக்கன் சிரியன் வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது. இவரிடம் 162 பவுன் தங்க நகையை வாங்கி வேறு ஒருவர் பெயரில் அடகு வைத்து ரூ.90 லட்சம் பணம் பெற்று வங்கி ஊழியர்கள் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. வங்கி ஊழியர்கள் நடத்திய இந்த பகல் கொள்ளை எப்படி அம்பலமானது.. எப்படி சுலைமானை வலையில் சிக்க வைத்து 90 லட்சத்தை இரண்டு பேர் ஏமாற்றினார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைக்கு தங்க நகையை அடகு வைப்பதில் இப்படியான மோசடிகள் நடக்குமா என்று கேட்கும் அளவிற்கு சென்னையில் ஒரு பகல் கொள்ளையே நடந்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள வங்கி மேலாளரிடம் நட்புடன் பழகியவருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் நடந்துள்ளது. அவரது அவசரத்தை தவறாக பயன்படுத்தி 162 பவுன் தங்க நகையை ஏமாற்றி அடகு வைத்து 90 லட்சம் மோசடி செய்திருக்கிறார்களாம் இரண்டு வங்கி ஊழியர்கள்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கத்தோலிக்கன் சிரியன் வங்கி
சென்னை சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலையை சேர்ந்த 32 வயதாகும் சுலைமான் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை சைதாப்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறுகையில், "சென்னை கிண்டியில் 'கத்தோலிக்கன் சிரியன் வங்கி' என்ற வங்கி கிளை செயல்பட்டு வருகிறது.
சேமிப்பு கணக்கு
இந்த வங்கியின் கிளையில் எனக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறது. சேமிப்பு கணக்கு உள்ளதால், நான் அடிக்கடி வங்கியில் பணம் போடுவேன்.. பின்னர் தேவைப்படும் சமயத்தில் பணம் எடுப்பேன். இதற்காக அடிக்கடி வங்கிக்கு சென்று வருவேன். இதனால் வங்கியின் மேலாளர் சாமிநாதன் எனக்கு நன்கு பழக்கமானார். என்னிடம் அன்பாக நன்றாக பேசி பழகுவார். நன்றாக பேசி பழகியதால் நட்பு பாராட்டினார். அப்படி நட்புடன் இருந்த வங்கி மேலாளர் சாமிநாதன்... எனக்கு ஒரு அன்பு கட்டளையிட்டார்.
அதீத நம்பிக்கை
வங்கியில் பணம் எடுப்பதற்கும், போடுவதற்கும் இனிமேல் நீங்கள் அலைய வேண்டாம். தேவைப்படும்போது என்னை செல்போனில் கூப்பிட்டால் வங்கி ஊழியரை உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்து, எல்லா உதவியும் செய்வேன் என்று கூறியிருந்தார். அவர் சொன்னபடியே எனக்கு தேவைப்படும்போது வங்கி ஊழியரை எனது வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். எனது தேவைக்காக 150 பவுன் நகைகளை வங்கி ஊழியர் மூலமாக அடமானம் வைத்து பணம் வாங்கினேன். பின்னர் அந்த நகைகளை பத்திரமாக மீட்டேன். இதுபோன்ற விஷயங்களில் வங்கி மேலாளர் சாமிநாதன் நேர்மையாக நடந்து கொண்டார். இதனால் எனக்கு அவர் மீது அதீத நம்பிக்கை ஏற்பட்டது.
கூடுவாஞ்சேரியில் நிலம்
இந்த சமயத்தில் கூடுவாஞ்சேரியில் நிலம் வாங்க விரும்பினேன். இதற்காக எனக்கு பெரிய அளவில் எனக்கு பணம் தேவைப்பட்டது. அதற்காக எனது நகைகள் மற்றும் தம்பியின் நகைகளை சேர்த்து மொத்தம் 162 பவுன் நகைகளை அடமானமாக வைத்து எனக்கு பணமாக தாருங்கள் என்று சாமிநாதனிடம் போனில் கூறினேன். அவரும் வங்கி காசாளரான 25 வயதாகும் பிரசாத் என்பவரை எனது வீட்டுக்கு அனுப்பினார்.
நகை உரிய முறையில் அடமானம்
எனது தங்க நகைகளை அடமானம் வைப்பதற்கு தேவையான சில ஆவணங்களை பிரசாத் என்னிடம் கொடுத்தார். அவற்றில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். நானும் அடமானத்துக்காக 162 பவுன் நகைகளை பிரசாத்திடம் கொடுத்து அனுப்பினேன். கடந்த செப்டம்பர் 2-ந்தேதி இந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலாளர் சாமிநாதனும் எனக்கு போன் செய்து நகைகளை உரிய முறையில் அடமானம் வைத்து அதற்கான பணத்தை உங்கள் கணக்கில் போட்டு விடுகிறோம் என்று தெரிவித்தார்.
ஆடிட்டிங் வேலை
ஆனால் அவர் சொன்னபடி எனது வங்கி கணக்கில் பணம் ஏதும் போடவே இல்லை. இதுபற்றி சாமிநாதனிடம் கேட்டபோது, வங்கியில் தற்போது ஆடிட்டிங் வேலை நடக்கிறது என்றார். அந்த வேலை முடிந்தவுடன் உங்கள் கணக்கில் பணம் போடப்படும் என்றும் உறுதியுடன் கூறினார். பின்னர் ஒரு நாள், வங்கியில் சர்வர் வேலை செய்யவில்லை என்றும், அந்த பிரச்சனை தீர்ந்தவுடன் உங்கள் கணக்கில் பணம் போடப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இப்படியாக சாக்குபோக்குகளை சொல்லி பணத்தை என் வங்கி கணக்கில் போடாமல் ஏமாற்றிக்கொண்டே இருந்தார்.
162 பவுன் நகைகள் எங்கே?
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த நான், செப்டம்பர் 15-ந்தேதி அன்று வங்கிக்கு நேரடியாக சென்றேன். அங்கு மேலாளர் சாமிநாதனை காணவில்லை. அதுபற்றி விசாரித்தபோது பணமோசடி பிரச்சனையில் சாமிநாதனை பணியிடைநீக்கம் செய்துவிட்டதாக கூறினார்கள். அப்படியானால் நான் கொடுத்த 162 பவுன் நகைகள் எங்கே? என்று விசாரித்தபோது, எனக்கு ஷாக் விஷயம் காத்திருந்தது.
90 லட்சம் மோசடி
நான் கொடுத்த தங்க நகைகளை வெவ்வேறு பெயர்களில் அதே வங்கியில் அடமானம் வைத்து ரூ.90 லட்சத்தை சாமிநாதன் மற்றும் பிரசாத் உள்ளிட்ட வங்கி ஊழியர்கள் சிலரும் மெகா மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. 'வேலியே பயிரை மேய்ந்தது போல்' சாமிநாதனும், அவரது ஆட்களும் சேர்ந்து எனது நகைகள் மூலம் பகல் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே இதுதொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எனது நகைகளை மீட்டு தர வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
வங்கி ஊழியர்கள் கைது
சுலைமான் அளித்த இந்த புகார் மனு சைதாப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வங்கியின் காசாளர் பிரசாத், ஆபரேட்டிங் மேலாளர் திவாகர் (32) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்கள். வங்கி மேலாளர் சாமிநாதன் உள்ளிட்ட மேலும் சிலர் தலைமறைவாகி விட்டார்கள்.. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
நம்பிக்கை வேண்டாம்
வங்கி ஊழியர்கள் நடத்திய இந்த நூதன கொள்ளை சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன தான் நம்பிக்கையானவர் என்றாலும், வங்கியில் சென்று அடகு வைத்து பணத்தை பெற வேண்டும். அதற்கு உரிய ரசீதும் வாங்க வேண்டும். வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் இப்படி செய்தால் இதுபோன்ற ஏமாற்றங்கள் தவிர்க்க முடியாததாக மாறிவிடும். ஏனெனில் தங்கம் இன்றைக்கு 84 ஆயிரத்திற்கு மேல் விற்கிறது.












Click it and Unblock the Notifications