நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களா பறிமுதல்? EMI செலுத்தாததால் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி
சென்னை: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் பாடகியும் அவரது தோழியுமான கெனிஷா உடன் அனைத்து நிகழ்ச்சிகளும் சென்று வருகிறார். இது அவ்வப்போது விவாதத்தை கிளப்பி வரும் நிலையில் ரவி மோகனுக்கு சொந்தமான ஈசிஆரில் உள்ள சொகுசு பங்களாவில் தனியார் வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். ரவி மோகன் இஎம்ஐ செலுத்ததால் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள நிலையில் அதில் ரூ.7.60 கோடியை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். ‛ஜெயம்' ரவி என்று அவரை ரசிகர்கள் அழைத்து வந்த நிலையில் அவர் தன்னை ரவி மோகன் என்று அழைக்கும்படி கூறியுள்ளார்.

ரவி மோகன் மனைவி பெயர் ஆர்த்தி. இந்நிலையில் தான் சமீபத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரித்தனர். கடந்த ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது ரவி மோகன் தனது தோழியும், பாடகியுமான கெனிஷா உடன் நெருக்கம் காண்பித்து வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கெனிஷா உடன் அவர் பங்கேற்று வருகிறார். இது பேசும் பொருளாகி உள்ளது. இந்நிலையில் தான் ரவி மோகனின் சொகுசு பங்களாவை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் தனியார் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் மகன்களுடன் சென்னை ஈசிஆரில் உள்ள சொகுசு பங்களாவில் வசித்து வந்தார். இந்த பங்களாவை ரவி மோகன் தனியார் வங்கியில் கடன் பெற்று வாங்கி உள்ளார். இதற்கிடையே தான் ஆர்த்தி - ரவி மோகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
இதையடுத்து அந்த சொகுசு பங்களாவுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர இஎம்ஐ தொகையை தனியார் வங்கிக்கு ரவி மோகன் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த பங்களாவை விட்டு ரவி மோகன் வெளியேறி வாடகைக்கு வீடு பார்த்து தங்கினார். இதனால் கடன் கொடுத்த வங்கி சார்பில் இஎம்ஐ செலுத்தும்படி ரவி மோகனுக்கு அறிவுரை வழங்கியது. ஆனால் அவர் கண்டுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் தான் ஈசிஆரில் உள்ள ரவி மோகனின் சொகுசு பங்களாவில் இன்று வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டினர். மொத்தம் ரூ.7.60 கோடி வரை கடன் தொகையை செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவிமோகன் தற்போது அந்த வீட்டுக்கு செல்வது இல்லை என்று கூறப்படுவதால், ரவி மோகனின் அலுவலகத்திலும் இந்த நோட்டீஸ் ஒட்ட உள்ளதாக கூறி அதிகாரிகள் சென்றனர்.
இதன்மூலம் ரவி மோகனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக வங்கிக்கான மாதாந்திர இஎம்ஐ தொகையை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்த பங்களாவை தனியார் வங்கி வசம் சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications