முதன்முறையாக.. ரயில்வேயின் சபாஷ் முயற்சி! இங்கேயும் ஓங்கி ஒலிக்கும் "தமிழ்"... பயணிகளுக்கு மகிழ்ச்சி
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு சலுகைகளை, நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் தென்னக ரயில்வே, தற்போதும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
ரயில்வே நிறுவனம் என்பது இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும்.. உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் இதுவும் ஒன்றாகும். இந்திய ரயில்வேயில் வருடத்துக்கு ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள்..

பணியாளர்கள்: ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது.. மொத்தம் 12.54 லட்சம் பணியாளர்கள் இந்த ரயில்வேயில் வேலை பார்த்து வருகிறார்கள்.. அதனால்தான், இன்று வளர்ந்து வரும் இந்தியாவில், ரயில் சேவையின் அத்தியாவசியம் பெருகி கொண்டே வருகிறது.. எனவேதான், ரயில்வே நிறுவனமும் புதுபுது சலுகைகளையும் அறிவித்து, பயணிகளை கவர்ந்திழுத்து வருகிறது.
இந்நிலையில், தென்னக ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. தற்போது, ரெயில்வேயை பொறுத்தவரை, பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.. குறிப்பாக, தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய தென்மாநிலங்களில் பெரும்பாலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் பேர் பணிபுரிகிறார்கள்.
இடைவெளி: ஆனால், இவர்களுக்கு மொழி தெரியாததால், பயணிகள் - ஊழியர்கள் இடையிலான இடைவெளி அதிகமாகி உள்ளது.. முக்கியமாக ரிசர்வேஷன் செய்யும்போது, அந்தந்த மாநில மொழிகள் தெரியாத காரணத்தினால், நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன..
அதுமட்டுமல்லாமல், ரெயில் ஓட்டுனர்களிடையேயும் மொழி பிரச்சனையால் தகவல் தொடர்புகள் குறைந்து காணப்படுகிறது.. இவைகளையெல்லாம் சரிசெய்வதற்காகவே, தெற்கு ரயில்வே ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, வட மாநில ஊழியர்களுக்கு அவர்கள் எந்த மாநிலத்தில் பணி செய்கிறார்களோ, அந்த மாநிலத்தின் மொழியை சொல்லிக்கொடுப்பது என தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளதாம்.
அறிக்கை: இதுகுறித்து, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட ரெயில்வே மேலாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் உள்ளதாவது:
அதில் "தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பணிபுரியும் பல ஊழியர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்களால் உள்ளூர் மொழிகளில் பேச முடிவதில்லை. இதை உணர்ந்த தெற்கு ரெயில்வே, தமிழ், மலையாளம், தெலுங்கு அல்லது கன்னடம் ஆகிய மொழிகளில் பணிபுரியும் அறிவைப் பெறுவது அவசியம் கருதுகிறது. இதன் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவை அளிக்க முடியும் என்று கருதுகிறது.
அட்வைஸ்: எனவே அனைத்து துறைகளின் தலைவர்கள், பணிமனைகள், ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி மையங்கள், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்ட ரெயில்வே மேலாளர்களுக்கு பிராந்திய மொழி கற்றலுக்கான பயிற்சித் தொகுதியை உருவாக்க அறிவுறுத்தப்படுகிறது. இவர்கள் அனைவரும் பயிற்சி திட்டங்களில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வே மேற்கொள்ளும் இந்த அதிரடிகளால், ரெயில்நிலையம் டிக்கெட் கவுண்டரில் பணிபுரியும் ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர், ஆர்பிஎஃப் வீரர்கள் போன்றோர் இதன்மூலம் பயன்பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications