நித்திரையில் இருந்து கொண்டு ஒற்றுமை யாத்திரையா? மேடையில் சிரித்தபடியே நைசாக ராகுலை தாக்கிய தமிழிசை
சென்னை: நித்திரையில் இருந்து ஒற்றுமை யாத்திரை நடத்துவதா? என காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தியையும், அவரது பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணத்தையும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11ம் தேதி உலக சகோதரத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் சிகாகோவில் 1893ம் ஆண்டு நடைபெற்ற உலக மதங்களின் நாடாளுமன்ற மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் பங்கேற்று உரையாற்றினார்.
சகோதர, சகோதரிகளே என்று ஆரம்பித்து சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை அமெரிக்க மக்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

உலக சகோதரத்துவ தினம் கொண்டாட்டம்
அன்றைய தினம் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய வரலாற்று புகழ்பெற்ற உரையை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 11ம் தேதி உலக சகோதரத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் உலக சகோதரத்தவ தினவிழா கொண்டாடப்பட்டது.

தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
இந்த விழாவில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியபோது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றை நடைப்பயணத்தை விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

சுவாமி விவேகானந்தர் பேச்சு
உலகில் உள்ள அனைத்து நாடுகளாலும், அனைத்து மதங்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் கொடுத்த நாட்டில் இருந்து நான் வந்திருக்கிறேன் என விவேகானந்தர் கூறினார். இந்த ஒரு வார்த்தையே விவேகானந்தர் எப்படிப்பட்ட நாட்டில் இருந்து அங்கு சென்றார் என்பதை காட்டுகிறது. பலவீனமாக நினைப்பதே பாவம் என்று சொல்கிறார் விவேகானந்தர்.

நித்திரையில் இருந்து ஒற்றுமை யாத்திரை
சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் 1893ம் ஆண்டிலேயே உலகிற்கு போதித்த நாடு இந்தியா. உலகிற்கே ஒற்றுமை யாத்திரை நடத்திவிட்டார் சுவாமி விவேகானந்தர். சிலர் நித்திரையில் இருந்து கொண்டு இன்று ஒற்றுமை யாத்திரை நடத்துவதாக கூறி ஒற்றுமைக்கு பெயர்போன நாட்டை பற்றி பேசுகிறார். 100 ஆண்டுக்கு முன்பே ஒற்றுமையை பேசி உலகிற்கு ஒற்றுமையை சொல்லி கொடுத்தாகவிட்டது. ஆனால் இன்று இந்தியாவுக்கு ஒற்றுமையை சொல்லிக்கொடுக்கிறேன் என்று நித்திரையில் இருப்பவர்கள் வேண்டுமானால் யாத்திரை செய்யலாம். ஆனால் நாம் சுவாமி விவேகானந்தர் சொன்னதை போல் விழித்து இருப்பவர்கள். எப்போதும் விழித்து கொண்டு இருப்பபவர்கள். நமக்கு ஒற்றுமை பற்றி யாரும் சொல்லி கொடுக்க வேண்டியது இல்லை'' என்றார்.

150 நாள் நடைப்பயணம்
இதன்மூலம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தியையும், பாரத் ஜோடோ யாத்திரையையும் விமர்சனம் செய்துள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் துவங்கிய ராகுல்காந்தி இன்று முதல் கேரளாவில் நடைப்பயணத்தை துவங்கி உள்ளார். காங்கிரஸ் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், 2024 தேர்தலை கருத்தில் கொண்டும் இந்த நடைப்பயணம் 150 நாட்கள் வரை பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்று காஷ்மீரின் ஸ்ரீநகரை சென்றடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications