பாரத் பந்த்.. வேலைநிறுத்தத்தால் முடங்கிய போக்குவரத்து.. சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை!
சென்னை: தொழிற்சங்கங்கள் சார்பாக நடத்தப்படும் நாடு தழுவிய பந்த் காரணமாக இன்று சென்னையில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க ஊழியர்கள் பேருந்துகளை இயக்காததால் சென்னையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Recommended Video
மத்திய அரசை கண்டித்து இன்று தொழிற்சங்கங்கள் மூலம் நாடு முழுக்க பந்த் நடத்தப்படுகிறது. இன்றும் நாளையும் மொத்தம் இரண்டு நாட்கள் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள், தொழிலாளர் கூட்டமைப்புகள், ஆளும் பாஜகவிற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் மூலம் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

மத்திய அரசு
சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. போன்ற கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. இதனால் ஆட்டோ சேவை, ரயில் சேவை ஆகியவையும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் வரும் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி அமைப்புகள், எல்ஐசி, ரயில்வே துறை போன்ற பொதுத்துறை அமைப்புகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. மொத்தம் 12 கோரிக்கைகளை முன் வைத்து இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.

12 கோரிக்கைகள்
அதன்படி தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடுதல், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், பொருளாதார கொள்கைகளை மாற்ற வேண்டும், ஜிஎஸ்டியில் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும், தனியார்மயமாக்கலை கைவிடவேண்டும் , மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும், பெட்ரோல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தப்படுகிறது.

எல்.பி.எப்
திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாகவும் இன்று போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு சார்பாக வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அரசு பேருந்துகள் இயங்கும் என்று போக்குவரத்து துறை தெரிவித்தது. இருப்பினும் தொழிற்சங்க ஊழியர்கள் பேருந்துகளை இயக்காததால் சென்னையில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களாக இருக்கும் ஊழியர்கள் பேருந்துகளை இயக்காத காரணத்தால் சென்னையில் காலை 8 மணி வரை 90 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை.

பேருந்துகள் இயங்கவில்லை
இன்று திங்கட்கிழமை என்பதால் காலையில் ஊழியர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் திணறினார்கள். அதேபோல் ஆட்டோ, ஷேர் ஆட்டோ சேவையும் இயங்கவில்லை. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்களில் மக்கள் ஆங்காங்கே பேருந்துக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தமிழ்நாடு முழுக்க பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. தனியார் பேருந்துகள் எதுவும் சென்னையில் இயக்கப்படவில்லை.

சென்னை நிலவரம்
சென்னையில் 3,500 பேருந்துகள் தினமும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று 694 மட்டுமே இயங்குகிறது.அதுவும் குறிப்பிட்ட சில ரூட்களில் மட்டுமே இயங்குகிறது. இதனால் காலை பணிக்கு செல்ல வேண்டிய மக்கள் கடுமையாக அவதிக்கு உள்ளாகி உள்ளனர். கோவையிலும் 10 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது. 90 பேருந்துகள் இயங்க வேண்டிய செங்கல்பட்டில் 18 பேருந்துகள் மட்டுமே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications