"அரிசிக்கும் ஜிஎஸ்டி".. ஹோட்டல்களில் இட்லி, தோசை விலை உயர்கிறது.. எவ்வளவு தெரியுமா?.. மக்கள் கலக்கம்
அரிசிக்கு விதிக்கப்பட்ட வரியால் ஹோட்டல்களில் இட்லி, தோசை விலைகள் உயர்கின்றன
சென்னை: அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைகளின் விலை 5 சதவீதம் உயரும் என்று ஹோட்டல்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் உணவுப் பொருளான அரிசி, கோதுமைக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரிவிதிப்பை கண்டித்து பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கு அந்த அமைப்புகள் நிறைய காரணங்களை சொல்லி வருகின்றன.. எப்போதுமே, உணவு பொருட்களுக்கு வரி உயர்வு என்பது இதுவரை இருந்ததில்லை.. நம் நாட்டை பொறுத்தவரை, 80 சதவீதம் பேர் ஏழை நடுத்தர மக்கள்தான்.

அரிசிக்கு வரியா?
இதுநாள் வரை, அரிசிக்கு எந்த அரசும் வரியை விதித்தது கிடையாது... ஆனால், மத்திய அரசு 5 சதவீதம் ஜிஎஸ்டியை இப்போது விதித்துள்ளதும், இந்த வரி அமலுக்கு வந்துள்ளதும்தான் மிகப்பெரிய சிக்கலை தந்து வருகிறது.. தமிழகத்தில் மொத்தம் 8000 அரிசி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.. இந்த அரிசி ஆலைக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல் மூட்டைகள் அரவைக்கு வருகிறது.

அரிசிக்கு ஜிஎஸ்டியா?
இந்த வகையில் நாள் ஒன்றுக்கு அரிசி ஆலைகளில் 20 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது... எனினும், அரிசியின் மீதான 5 சதவீத ஜிஎஸ்டியை விதிப்பதால், பெருத்த நட்டம் ஏற்படும் என்றும், உடனடியாக இந்த வரியை நீக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரினர்.. இதை முன்னிறுத்திதான், தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு முன்பு, வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பாதிப்பு
இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் 8000 ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அதனை சார்ந்த லாரி உரிமையாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், அரிசி வணிகர்கள், அரிசி வணிகத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் என்று கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேல் பாதிப்புக்கு ஆளானார்கள்.. அரிசி மீது வரி விதிக்கப்பட்டதால் ஹோட்டல்களில் சாப்பிடக்கூடிய உணவு பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது... இதுகுறித்து சென்னை மாவட்ட ஓட்டல்கள் சங்க தலைவர் ரவி சொன்னதாவது:

அரிசி
5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதால் உணவு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹோட்டல் உணவு பொருட்களுக்கு மட்டும்தான் இரட்டை வரி விதிக்கப்படுகிறது. ஏற்கனவே ஹோட்டல் உணவு பண்டங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது... அரிசியில் இருந்துதான் இட்லி, தோசை வகைகள், பொங்கல் போன்றவை தயாரிக்கப்படுகிறது. இவை உள்பட டீ, காபி, வடை, பூரி, சப்பாத்தி மற்றும் அசைவ உணவுகள் அனைத்திற்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

அரிசிக்கு வரி
அப்படி இருக்கும்போது அரிசிக்கு தனியாக ஜிஎஸ்டி வரி தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இது நேரடியாக பொதுமக்களைதான் பாதிக்கும். எந்த வரி விதித்தாலும் அந்த வரி சுமை இறுதியில் பொதுமக்களின் தலையில்தான் விழுகிறது... இதனால் ஓட்டல் தொழில் இன்னும் பாதிக்கப்படும். ஏற்கனவே ஓட்டல்களில் விலை உயர்வால் வியாபாரம் குறைந்துவிட்டது. சமையல் கேஸ், பால், மளிகை பொருட்கள், சொத்து வரி உயர்வால் வாடகை அதிகரிப்பு போன்றவற்றால், இந்த தொழில் மேலும் பாதிப்புக்கு ஆளாகிவிட்டது..

கஸ்டமர்கள்
இப்போது, அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதித்து இருப்பது இத்தொழிலை மேலும் நசுக்குவதாக உள்ளது. இந்த உயர்த்தப்பட்ட 5 சதவீத வரியால் இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்ட உணவு வகைளின் விலை 5 சதவீதம் உயரும். அதாவது 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை அதிகரிக்கும். இப்போதைக்கு 2 இட்லி ரூ. 30-க்கும், தோசை வகைகள் ரூ.50 முதல் ரூ.70 வரை விற்கப்படுகின்றன.. இவற்றின் விலை மேலும் உயரும்போது, கஸ்டமர்கள் ஹோட்டலுக்கு வரவே பயப்படுவார்கள்...

தோசைகள், இட்லி
ஹோட்டல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு நடத்த முடியாமல் பலர் வெளியேறி விட்டனர். இந்த நிலையில் தொடர்ந்து ஓட்டல் தொழில் மீது வரி விதிப்பதால் ஓனர்கள்தான் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்... அதனால், அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். ஒரு பொருளுக்கு பல வடிவில் வரி விதிப்பது முறையா? இது பொதுமக்களை கசக்கி பிழிவதற்கு சமம்" என்றார்... ஹோட்டல்களில் இட்லி, தோசைகள் விலை உயரும் என்று அறிவித்திருப்பது பொதுமக்களை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது.












Click it and Unblock the Notifications