வட சென்னையில் ஏழை மாணவர்களுக்கு கிடைக்க போகும் பிரம்மாண்டம்.. ஸ்டாலினின் தொகுதியில் சூப்பர் விஷயம்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு நல்ல செய்தி வந்துள்ளது. கொளத்தூரில் உள்ள ஜிகேஎம் காலனியில் ஒரு மினி விளையாட்டு ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளதாக தகல்கள் வெளியாகி உள்ளது. இந்த மினி ஸ்டேடியம் எப்படி இருக்கும் என்றால், நீச்சல் குளம், பேட்மிண்டன் விளையாட்டு மைதானம் உள்பட பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் அமைய போகிறது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதி என்றால், அது வில்லிவாக்கத்தை அடுத்துள்ள கொளத்தூர் தொகுதி தான். இந்த தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகாரிகள் தொகுதியில் ஒவ்வொரு பகுதிகளிலும் தேவையான அடிப்படை வசதிகளை கோரிக்கைகளின் அடிப்படையில் நிறைவேற்றி வருகிறார்கள்,
இந்நிலையில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் படி, புதிய விளையாட்டு அரங்கம் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) ஒத்துழைப்புடன், விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 11 மைதானங்கள் (1 மைதானம் = 2,400 சதுர அடி) ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளன. அப்படி மீட்டெடுக்கப்பட்ட ஜிகேஎம் காலனியில் மைதானத்தில் மினி விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட உள்ளது. அதில் விரைவில் நீச்சல் குளம், இரண்டு பேட்மிண்டன் மைதானங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஜிம்கள் மற்றும் கழிப்பறைகள் மற்றும் நிர்வாக அலுவலகங்கள் உட்பட விளையாட்டு அரங்கத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த மினி ஸ்டேடியம் குறித்து சென்னை 69வது வார்டு கவுன்சிலர் சரிதா மகேஷ்குமார் கூறுகையில், எங்கள் ஏரியாவில் பல திறமையான நீச்சல் வீரர்கள் இருக்கிறார்கள். கொளத்தூரை பொறுத்தவரை தனியார் நீச்சல் குளங்கள் உள்ளன, ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் அவற்றில் போய் பயிற்சி பெற முடியாது. இதேபோல் தான் பேட்மிண்டன் மைதானங்களின் நிலையும். நாங்கள் ஆரம்பத்தில், குத்துச்சண்டை மைதானம் அமைக்க திட்டமிட்டோம். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அணுகினோம். அவர் அவர் பூப்பந்து மைதானம் மற்றும் நீச்சல் குளம் அமைக்க ஒப்புக்கொண்டார் என்றார்.
தங்கள் கனவு நினைவாகப்போவதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராஜாஜி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கூறும் போது, விளையாட்டு மைதானம் குறித்த இந்த கோரிக்கை 2021ல் முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தோம். எங்கள் குழந்தைகள் நீச்சல் பயிற்சிக்காக ஷெனாய் நகர் அல்லது முகப்பேர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. கொளத்தூரில் இங்கேயே ஒரு வசதி இருந்தால் பெரிய ஊக்கமாக இருக்கும் என்று வலியுறுத்தினோம். இப்போது அமைக்ப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் எங்களுக்கு தகுதியான, அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்களும் தேவை. இதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பேட்மிண்டன் மைதானங்கள் மிகவும் காஸ்ட்லியானவை.. ஏழைக் குழந்தைகளால் அதை எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. மேலும் அந்த இடங்கள் ஏற்கனவே முழுமையாக புக்கிங் செய்யப்பட்டு, ஸ்லாட் அடிப்படையில் தான் இயங்கும். எனவே அரசு அமைக்கப்போகும் இந்த மினி ஸ்டேடியம் அனைவரும் செல்லக்கூடியதாக இருக்கும். ஆனால் இந்த ஸ்டேடியத்தின் உள்கட்டமைப்பு மிகவும் தரமாக இருக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம் என்றார்கள்.
சிஎம்டிஏ துறையின் அமைச்சரும், இந்து அறநிலையத்துறை அமைச்சருமான சேகர் பாபு இதுபற்றி கூறும் போது, " கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்டவை எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே தமிழக அரசின் குறிக்கோள். இந்த புதிய மைதானம் அமைந்த பிறகு கொளத்தூரில் உள்ள குழந்தைகள் விரும்பும் விளையாட்டுகளை விளையாட அதிக தூரம் செல்ல வேண்டியதிருக்காது. அவர்களின் வீட்டு வாசலில் அதிநவீன வசதிகளை கொண்டு வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications