பொங்கலுக்கு டபுள் லட்டு.. தட்டி தூக்கும் தமிழ்நாடு அரசு! பாதிக்குப் பாதி உயரும் மகளிர் உரிமைத் தொகை!
சென்னை: தமிழக பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழ்நாடு அரசின் முக்கியமான நலத்திட்டமாக விளங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் தொகை 50 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு உண்மையாகும் பட்சத்தில், தற்போது மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.
2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்த திட்டங்களில் ஒன்று மகளிர் உரிமைத்தொகை திட்டம். தேர்தல் அறிக்கையிலேயே பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற இந்த வாக்குறுதி, திமுகவின் முக்கியமான தேர்தல் ஆயுதமாக மாறியது.
அதனால் பெண்கள் மத்தியில் திமுகவுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. ஆனால், திமுக ஆட்சி அமைந்த பிறகும் உடனடியாக இந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. மாநிலத்தின் நிதி நிலைமை சரியில்லை என்ற காரணத்தை முன்வைத்து, திட்டம் தொடர்ந்து தள்ளிப் போனது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
இதை எதிர்க்கட்சிகள் தீவிரமாக விமர்சித்தன. குறிப்பாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள், "தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவீர்கள்?" என்று மேடைக்கு மேடை கேள்வி எழுப்பின. இந்த சூழ்நிலையில், 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்படும் என்று அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின.
மாதந்தோறும் ரூ.1,000
முதற்கட்டமாக 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்கள் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும் ரூ.1,137 கோடியே 54 லட்சத்து 92 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கிய பிறகு பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
மகளிர் உரிமைத் தொகை 2.0
அதே நேரத்தில், பல பெண்கள் தங்களையும் இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் புதிதாக விண்ணப்பித்த 28 லட்சம் பேரில் இருந்து 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டாம் கட்டமாக அவர்களுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இனிப்பான செய்தி
அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, "மகளிர் உரிமைத்தொகை மேலும் உயர்த்தப்படும்" என்று முதல்வர் கூறியிருந்தார். இந்த வார்த்தைகள் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, "விரைவில் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும்" என்று கூறினார். இதன் மூலம் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்பட உள்ளதாக திமுக வட்டாரங்களில் தகவல் பரவத் தொடங்கியது.
ரூ.1500 மகளிர் உரிமைத்தொகை
இந்த அறிவிப்பு சட்டசபையில் ஆளுநர் உரையில் இடம்பெறுமா, அல்லது இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா, அல்லது தேர்தல் அறிக்கையில் மட்டும் இடம்பெறுமா என்ற குழப்பம் நீடித்த நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், தமிழக பெண்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாகவும், அரசியல் ரீதியாக திமுகவுக்கு முக்கியமான திருப்பமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications