திருவண்ணாமலையில் என்ன நடந்தது? ட்ரெக்கிங் சர்ச்சை பற்றி விளக்கமாகச் சொன்ன பிக்பாஸ் அர்ச்சனா
சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை அர்ச்சனா, தனது காதலருடன் திருவண்ணாமலை மலை உச்சிக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றதாக அவருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர் பேட்டி அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை அர்ச்சனா, 'ராஜா ராணி 2' சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர். அவர் தொகுப்பாளராக பிரபலம் ஆகி அதன் பின் சீரியலில் நடிக்க தொடங்கியவர். சீரியலை விட அவர் பிக் பாஸ் ஷோ மூலமாக அனைவருக்கும் தெரிந்த முகம் ஆனார். அவர் பிக் பாஸ் 7வது சீசனில் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்து அவர் வெற்றியாளர் ஆனார். அதைத்தொடர்ந்து, சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை ஆன்மிக ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மலை 2,668 அடி உயரம் உள்ளது. இந்த மலைப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலையில் ஏற பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நடிகை அர்ச்சனா திருவண்ணாமலை மலை மீது ஏறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவர் மலை ஏறியது குறித்து வீடியோ ஒன்றையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மலை மீது ஏறி இறங்கியது மிகவும் கடினமாக இருந்ததாகவும், இருள் சூழ்ந்துவிட்டதால் தான் அச்சமடைந்ததாகவும், டிரெக்கிங் செல்வதாக இருந்தால் காலையிலேயே ஏறி, மாலைக்குள் இறங்க திட்டமிட்டுக்கொள்ளுங்கள் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இது சர்ச்சை ஆன நிலையில் வனத்துறையினர் அர்ச்சனாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனுமதியின்றி மலையேறிய குற்றத்திற்காக அர்ச்சனா மற்றும் அருணுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து இருக்கிறது. இதைத்தொடர்ந்து, தான் சமூக வகைதளத்தில் வெளியிட்ட வீடியோவை நீக்கினார் அர்ச்சனா.
இந்நிலையில் இதுதொடர்பாக பேட்டி அளித்துள்ள நடிகை அர்ச்சனா, "6 வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு போயிருந்தேன். அப்போது, நல்லா சம்பாதிச்ச பிறகு மீண்டும் இங்கு வரவேண்டும் என மனதில் நினைத்திருந்தேன். சமீபத்தில் ஒரு நாள் திருவண்ணாமலைக்கு போக வேண்டும் எனத் தோன்றியது. அதன்படி ஆன்மீக பயணமாகவே திருவண்ணாமலைக்கு சென்றேன்.
என்னுடன் நான் திருமணம் செய்துகொள்ளப்போகும் அருணும் வந்தார். திருவண்ணாமலை சென்று முதல் நாள் ரமணாஸ்ரமம், அடுத்த நாள் கந்தாஸ்ரமம் சென்றோம். தியானம் செய்துவிட்டு திரும்பிய போதுதான் நிறைய பேர் அந்த வழியாக மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவரிடம் கேட்டபோது, தீபம் ஏற்றும் மலை உச்சிக்கு போவதாகச் சொன்னார்கள். அங்கு சிவன் பாதம் பார்க்கலாம் எனக் கூறினார்கள்.
உடனே நாங்களும் மலை ஏறினோம். மலை ஏறும் வழியில் எந்த இடத்திலும், இது தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்பை பார்க்கவில்லை. நான் சட்டத்தை மதிப்பவள். அடுத்த நாள் அங்கு எடுத்த வீடியோக்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்தேன். அதற்கு எங்களை காயப்படுத்தும் விதமாக கமெண்ட்களோ வந்தன. கல்யாணத்துக்கு முன்பு ஏன் தனியாக போனாங்க எனக் கேட்டு கீழ்த்தரமாக பலர் கமெண்ட் செய்திருந்தனர்.

சிலர், அங்கு செல்வதற்கு அனுமதி இல்லையே.. எப்படி போனீங்க என்றும் கேட்டிருந்தனர். அதன்பிறகு தான் நிலைமையை உணர்ந்து நாங்களே வனத்துறையினரை தொடர்பு கொண்டோம். நேரில் வரச் சொன்னதும் சென்றோம். ட்ரெக்கிங் போவதால் மண் அரிப்பு உண்டாகி மழை நேரங்களில் பாறைகள் உருண்டு விழும் சம்பவங்கள் நடக்கிறது. அதனால் மலை உச்சிக்குச் செல்ல அனுமதி இல்லை எனக் கூறினர்.
நான் ஆன்மிக பயணமாக மட்டுமே வந்ததைச் சொன்னதும், அதை ஏத்துக்கிட்டாலும், 'நீங்க செலிப்ரிட்டியா இருக்கீங்க, உங்களுக்கு இதுல எக்ஸ்க்யூஸ் கொடுத்தா, வெளியில வேற மாதிரி ரியாக்ட் ஆகும் எனச் சொன்னார்கள். எங்களுக்கு அபராதமா விதிக்கப்பட்ட பத்தாயிரம் ரூபாயை செலுத்திவிட்டு கிளம்பினோம். ஆனால், சில உள்ளூர் மீடியாக்காரர்கள், இந்த செய்தியை பெரிதாகப் பரப்பிவிட்டார்கள். இந்த மன உளைச்சலால் கோவிலுக்குள் போய் சாமி கும்பிடாமலே திரும்பிவிட்டேன்" என வேதனையுடன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications