ஸ்விக்கி, சொமேட்டோவுக்கு ‘செக்’ - பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை- அதிர்ச்சி கொடுத்த போக்குவரத்து துறை!
சென்னை: தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை என ஆர்.டி.ஐ மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, சாலை போக்குவரத்து ஆணையரகம் பதிலளித்துள்ளது.
இருசக்கர வாகனங்களை வணிகரீதியான பயன்பாட்டுக்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை என்று சாலை போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.
உணவுகளை டெலிவரி செய்வதற்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு எந்தவிதமான அனுமதியும் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சி.

பைக் டாக்சி
கால் டாக்ஸி சேவையைப் போல் பைக் டாக்ஸி சேவைகளும், சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ராபிடோ, ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பைக் டாக்ஸி சேவைகளை வழங்கி வருகின்றன.
பைக் டாக்சி செயலிகள் அறிமுகமானபோதே, இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்த அனுமதி இல்லை என சர்ச்சை எழுந்தது. சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் 18 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ஐகோர்ட் அனுமதி
பின்னர், புதிய மோட்டார் வாகன சட்டத்தில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது என போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நடந்தது. அப்போது, வணிக ரீதியாக இருசக்கர வாகனங்களை பயன்படுத்த தமிழக அரசு விதிமுறை வகுக்கும் வரை ரேபிடோ பைக் டாக்ஸி சேவை தொடர்ந்து செயல்படலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்டிஐ கேள்வி
இந்நிலையில், தன்னார்வலர் ஒருவர், பைக் டாக்ஸி குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் சாலை போக்குவரத்து ஆணையரகத்திடம் கேள்விகள் எழுப்பியிருந்தார். அவருக்கு போக்குவரத்து துறையின் பொது தகவல் அலுவலர் அளித்துள்ள பதிலில், இருசக்கர வாகனங்களை வணிகரீதியான பயன்பாட்டுக்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை
இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் வணிகரீதியான பெர்மிட் வகை குறித்த கேள்விக்கு, இருசக்கர வாகனங்களை வணிகரீதியாக பயன்படுத்த அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊபர், ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்களுக்கு வணிகரீதியாக அனுமதி அளித்ததாக எந்த தகவலும் எங்களிடம் இல்லை என்றும் போக்குவரத்துத்துறை பதிலளித்துள்ளது.












Click it and Unblock the Notifications