Bird Flu: சென்னையில் பரவும் பறவை காய்ச்சல்.. பொது சுகாதாரத் துறை வெளியிட்ட முக்கிய அலர்ட்
சென்னை: பறவை காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள் மற்றும் பண்ணை உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. காகங்கள், பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்தால் அவற்றை வெறும் கையினால் தொடக்கூடாது என்றும், கால்நடை மருத்துவத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பறவை காய்ச்சல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள பொது சுகாதாரத்துறை, தற்போது வரை மனிதர்கள் யாரும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

செத்து மடியும் காகங்கள்
சென்னையில் சமீப நாட்களாக காகங்கள் உயிரிழந்து வருகின்றன. குறிப்பாக சென்னை அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட காகங்கள் கொத்தாக உயிரிழந்தன. இதனால் மக்கள் பெரிதும் அச்சப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் உயிரிழந்த கிடந்த காகங்களை சேகரித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழங்கத்துக்கு ஆய்வுக்கான அனுப்பி வைத்தனர். அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த சில நாட்களாகவே பூங்காவில் காகங்கள் அதிகம் இறக்கின்றன.
பறவை காய்ச்சல் பாதிப்பு
உயிரிழக்கும் காகங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஒருநாள் முழுவதும் நின்ற இடத்திலேயே நின்றபடியே இந்த காகங்கள் மடிகின்றன" என்றனர். இந்த நிலையில் இதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஹெச்.5என்.1 என்ற வைரஸ் தொற்றின் பாதிப்பு காரணமாக தான் காகங்கள் செத்து மடிவதாக ஆய்வு முடிவுகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் யாரும் செத்து கிடக்கும் காகங்களை தொட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். பறவை காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாலே இந்த காகங்கள் செத்து மடிவதாகவும் அவற்றை யாரும் தொட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
பறவை காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் பண்ணை உரிமையாளர்கள் காகங்கள், கோழிகள், பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்தால் அவற்றை வெறும் கையினால் தொடக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறது. குறிப்பாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
காகங்கள், பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தால் 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க வேண்டும் அல்லது எரித்துவிட வேண்டும் என்றும் இல்லையெனில் அருகில் உள்ள கால்நடை மருத்துவத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. பறவை காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தற்போது வரை மனிதர்கள் யாரும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை என்றும் பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
பறவை காய்ச்சல் அறிகுறிகள்:
H5N1 வைரசால் பரவும் பறவை காய்ச்சல் எளிதாக மனிதர்களுக்கு பரவாவிட்டாலும், பாதிப்பு உறுதியானால் தீவிர நிலைக்கு கூட செல்ல வாய்ப்பு உள்ளது. பொதுவாக இதன் அறிகுறி என்று பார்த்தால், அதிக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு, தலைவலி போன்ற அறிகுறிகள் தோன்றும்.
ஒரு சிலருக்கு கண்கள் சிவக்கலாம், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி ஏற்படலாம். உடனே சிகிச்சை பெறவில்லை என்றால் நிமோனியா, தீவிர மூச்சுக் கோளாறு போன்ற ஆபத்தான நிலைகளுக்கும் வழிவகுக்கும். இறந்த பறவைகளை தொட்டபிறகு இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது.












Click it and Unblock the Notifications