பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு ஒண்ணுமில்ல.. நரிக்குறவ மாணவனை துரத்தியடித்ததா திருவள்ளூர் அரசு பள்ளி
சென்னை: ஆதார் கார்டு இல்லாத ஒரே காரணத்தினால் சம்பந்தப்பட்ட மாணவனை, அரசு பள்ளியொன்று வெளியேற்றியதாக கூறப்படுகிறது.. எனவே ஆதார் கார்டு எடுக்க சென்றால், பிறப்பு சான்றிதழும் கேட்டு, அதிகாரிகள் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.. பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதால், அந்த மாணவனால் கல்வி கற்க முடியாத நிலைமை வந்துள்ளது. இந்த பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளது, மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது. என்ன நடந்தது திருவள்ளூர் மாவட்டத்தில்?
நரிக்குறவர்கள் பெரும்பாலும், ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்கி வசிப்பதில்லை. அடிக்கடி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்துகொண்டே இருப்பவர்கள்.

கைவினை பொருட்கள்
வேட்டையாடுதல், கைவினைப் பொருட்களைச் செய்து பொது இடங்களில் விற்பனை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு ஜீவனத்தை நடத்துபவர்கள்.. இவர்களுக்கென்று சொந்த இடம், சொந்த வீடு எதுவும் இல்லாத நிலையில், சாலையோரங்களிலும்., ரயில் நிலையங்களிலும், பாலங்களுக்கு அடியிலும், அரசுக்குச் சொந்தமான பொதுவெளியிலும் தற்காலிக குடிசைகள் போட்டு வாழ்கின்றனர்.
இவர்கள் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்குவதில்லை என்பதால், அரசாங்கமும் தரும் எந்த விதமான அடையாள அட்டையும் இவர்களுக்கு வழங்கவில்லை.. இதற்கு பிறகுதான், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என்று அனைத்தும் வழங்கப்பட்டன.
ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ்
இதனையடுத்து, கடந்த 2022-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக நரிக்குறவர்கள் (வாக்ரிகள்) மற்றும் மலைப் பகுதியில் வாழும் பழங்குடியினர் வாக்களிக்க துவங்கினார்கள்.. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.
பூவிருந்தவல்லி வட்டம், அம்மா நகர் நரிக்குறவர் வகுப்பை சேர்ந்த தம்பதி சிவகுமார் - ராதிகா.. இவர்களது மகன் சந்தோஷ், அதே பகுதியி உள்ள உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், சந்தோஷூக்கு ஆதார் கார்டு இல்லை என்பதால், அவரை பள்ளியில் வெளியேற்றிவிட்டதாக தெரிகிறது.. இதனால், சந்தோஷ் தன்னுடைய அப்பாவுடன் கோயம்பேட்டிலுள்ள ஆதார் அலுவலகத்தில் விண்ணப்பிக்க சென்றுள்ளார்..
திருவள்ளூர் அரசு பள்ளி
அப்போது பிறப்பு சான்றிதழ் இல்லாமல் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது என்று அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள்.. இதனால் பிறப்பு சான்றிதழ் கோரி சந்தோஷ் குடும்பத்தினர் அலைந்து திரிந்துள்ளனர்.. பூவிருந்தவல்லி வட்டாட்சியர் அலுவலகம், கலெக்டர் ஆபீஸ் என அனைத்து இடங்களுக்கும் சென்று முயற்சித்தும்கூட, சந்தோஷூக்கு பிறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை, ஆதார் அட்டையும் கிடைக்கவில்லை.
இதனால் மனம் உடைந்துபோன சந்தோஷ் குடும்பத்தினர், சந்தோஷ் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க விரும்பினர்.. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு, மனுவும் தந்தனர்..
ஆனால், பல நாட்களாகவே 2 சான்றிதழுக்காக அலைந்து திரிந்து மனம் நொந்து போயிருக்கிறார்களாம் சந்தோஷ் குடும்பத்தினர்.
ஸ்கூல் போக முடியல
மாணவன் சந்தோஷ் செய்தியாளர்களிடம் இதைப்பற்றி சொல்லும்போது, "பிறப்பு சான்றிதழ் எனக்கு இல்லை என்பதால், ஆதார் கார்டு வாங்க முடியவில்லை, இதனால் பள்ளிக்கும் என்னால் போக முடியவில்லை.. யாராவது எனக்கு உதவி செய்யுங்கள்" என்று கண்ணீர் மல்க கூறினார்.. பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு இல்லாமல் மாணவனால் கல்வி கற்க முடியாத சூழல் உருவாகியிருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. அத்துடன், சர்ச்சைகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை காட்டம்
இப்படியொரு நிலைமை ஏற்படுத்திய தமிழக அரசுக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றன.. அந்தவகையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட மாநில கல்விக் கொள்கையின் பங்கு இதுதானா? பிரதமர் நரேந்திர மோடி, நரிக்குறவர் வகுப்பினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கினார்.
ஆனால் தமிழ்நாட்டில் திமுக அரசு பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை இல்லாததால் அரசு பள்ளியில் இருந்து மாணவனை நீக்குகிறது. அந்த மாணவனின் பெற்றோர்கள் தாசில்தார் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கு சென்றுவிட்டனர். ஆனால் அங்கு அரசு அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர். இந்த திமுக அரசில் சமூக நீதி என்பது பேச்சில் மட்டும் தான் உள்ளது, செயலில் இல்லை" என கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications