5 கி.மீ தூரத்தை கடக்க 45 நிமிடங்களா? ரொம்ப நன்றிங்க மேடம்! தமிழச்சிக்கு பாஜக பிரமுகர் கிண்டல் ட்வீட்
சென்னை: என்னாது 5 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 45 நிமிடங்களா? என தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியனை பாஜக பிரமுகர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இப்படி மோசமான சாலைகளை சரி செய்ய அடுத்த திட்டம் என்ன என்பதையும் அவர் கேட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரதீப் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கரணையில் உள்ள ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸில் இருந்து காமாட்சி மருத்துவமனைக்கு இடையிலான 5 கி.மீ. தூரத்தை கடக்க 45 நிமிடங்கள் ஆனது.

இன்று காலை வாகனங்கள் இன்ச் இன்ச்சாக நகர்ந்து கொண்டிருந்தது. இது பற்றி யாருக்கும் கவலையில்லை. நன்றி திமுக என கிண்டலாக பதிவிட்டிருந்தார். மேலும் மற்றொரு ட்வீட்டில் இந்த பிரச்சினை குறித்து தமிழச்சி தங்கபாண்டியன் சிந்தித்திருக்க வேண்டுமே.
இது பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு மாறியுள்ளது. பள்ளிக்கரணையிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டேன். அசோக் பில்லரை வந்தடையவே 10.30 மணி ஆகிவிட்டது. பள்ளிக்கரணை டூ வேளச்சேரி பகுதியில்தான் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலை போக்க திமுகவின் அடுத்த திட்டம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் சாலைகள் கனமழைக்கு மட்டுமல்ல சிறிய அளவிலான மழைக்குக் கூட கடும் சேதம் அடைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதி மக்கள் மழையை கண்டாலே அஞ்சி நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சாதாரண மழைக்கே இடுப்பளவு தண்ணீரும் மோசமான மழைக்கு 10 அடிக்கு மேலும் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவுக்கு மோசமாக உள்ளது. இதற்கு பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் சாலைகளும் குண்டும் குழியுமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதுகுறித்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சென்னை வேளச்சேரியிலிருந்து பெரும்பாக்கம் வரை உள்ள பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல், மோசமான சாலைகள் உள்ளிட்டவைகளால் வாகன ஓட்டிகள் இந்த பக்கம் செல்லவே அவதிப்படுகிறார்கள்.
பெரும்பாக்கம் மெயின் ரோடு தூரம் 2 முதல் 3 கி.மீ. வரைதான். ஆனால் இந்த தூரத்தை கடக்கவே அதிக நேரம் ஆகிறது. சென்னைக்கு சிறந்த நிர்வாகம் தேவை என பாஜக பிரமுகர் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அது போல் பொதுமக்களும் கோரிக்கை விடுத்ததன் பேரில் பெரும்பாக்கம் பகுதியில் சாலையை சீர் செய்ய தமிழச்சி தங்கபாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அது போல் இந்த பிரச்சினைக்கும் அவர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications