நான் தலைமறைவாகல! மொட்டை போட்டு புது கெட்டப்பில்.. விசாரணைக்கு வந்த ஆர்.கே சுரேஷ்! அப்ரூவர் ஆகிறார்?
சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ், பொருளாதார குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராக சென்னை வந்துள்ளார். இன்று பொருளாதார குற்றப்பிரிவில் அவர் விசாரணைக்கு ஆஜரானார் . மொட்டை போட்டு அவர் புது தோற்றத்தில் விசாரணைக்கு வந்து உள்ளார்.
ஆருத்ரா மோசடி புகாரில் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளதால் அவரின் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது.

ஆருத்ரா வழக்கு; திடீர் திருப்பமாக ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ், பொருளாதார குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராக சென்னை வந்துள்ளார். அவரின் வருகைக்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
லுக் அவுட் நோட்டீஸ் காரணமாக, விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி போலீசில் ஆஜராக வந்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து, வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இன்று பொருளாதார குற்றப்பிரிவில் அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
கைதாகும் ஆர்.கே சுரேஷ்: இந்த வழக்கில் தொடர்புடைய ஆர்.கே சுரேஷ் துபாயில் கைதாக இருப்பதாக கூறப்பட்டது. கைதிகள் பரிமாற்றம் மூலம், துபாயில் துபாய் போலீஸ் மூலம் ஆர். கே சுரேஷ் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. இங்கே உள்ளே துபாய் கைதி ஒருவரை பரிமாற்றி அதன்மூலம் ஆர்.கே சுரேஷை தமிழ்நாடு கொண்டு வர உள்ளனர். ஆர்.கே சுரேஷ் தமிழ்நாடு வரும் பட்சத்தில் அவரை அப்ரூவர் ஆக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய "பெரிய தலைகளை " கைது செய்ய தமிழ்நாடு போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்பட்டது.
அந்த கைது நடவடிக்கையை தடுக்கும் விதமாக.. இந்த வழக்கில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக.. கைது நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர் சென்னை திரும்பி உள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆருத்ரா கேஸ்: ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.
இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹாரிஸுக்கு கட்சியில் பதவி கொடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
வழக்கு பின்னணி: இந்த வழக்கில் மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர் . அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி, பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், உள்ளிட்ட 11 பேர் இதுவரை கைதும் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டன. அதேபோல் பல கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தகவலை பெற்றது. அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவினத் சம்மன் அனுப்பினர். இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், பட தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தம்மை அணுகியதாகவும், அது தொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாக கூறியுள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதால், விசாரணைக்கு நேரடியாக ஆஜராக இயலாது என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த விவகாரத்தில் தம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், தமக்கும் ஆரூத்ரா நிறுவனத்தின் மோசடிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications