கோபாலபுரத்துக்கு ஓடோடி வந்த 2 பேர்.. "செல்வி அக்கா எவ்ளோ ஆறுதல் சொன்னாங்க".. குமுறி கொட்டிய பிரேமலதா
சென்னை: முரசொலி செல்வம் உடலுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் திரண்டு வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.. அந்தவகையில், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்தும் கோபாலபுரம் விரைந்து வந்து அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக்குறைவால் மறைந்த முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான மறைந்த முரசொலி செல்வம் (84) உடல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முரசொலி செல்வம் உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்தவகையில், திமுக மற்றும் கூட்டணி கட்சியிலிருந்து மட்டுமல்லாமல், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட மாற்று கட்சியிலிருந்தும் பல தலைவர்கள் திரண்டு வந்து, முரசொலி செல்வம் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..
முரசொலி செல்வம்: அந்தவகையில் முரசொலி செல்வத்துக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கோபாலபுரத்தில் உள்ள மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.. அவருடன் எல்.கே.சுதிஷூம் வந்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "முரசொலி செல்வம் இறந்த செய்தியை கேட்டு இன்று காலை மிகவும் அதிர்ச்சியடைந்தேன்... கட்சிக்கு அப்பாற்பட்டு கேப்டன் மறைவுக்கு செல்வி அக்கா எனக்கு அவ்ளோ ஆறுதல் சொன்னாங்க... தைரியம் சொன்னாங்க.. செல்வி அக்காவால இந்த துக்கத்துல இருந்து மீளவே முடியல..
அதிக துயரம்: உடல்நலக்குறைவால் செல்வம் இறந்தாலும், முரசொலிக்கும், திமுகவுக்கும் இது மிகப்பெரிய இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். முரசொலி செல்வத்தின் மறைவுக்கு தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கண்கலங்கி சொன்னார் பிரேமலதா. அதுமட்டுமல்லாமல், பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்..
அதில், "திரு.முரசொலி செல்வம் அவர்கள் இன்று (10.10.2024) வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு துயரமடைந்தேன். கேப்டன் அவர்களுடன் நல்ல நட்புடன் பழகக் கூடியவர், அமைதியானவர், அன்பானவர் அவருடைய இழப்பு திமுகவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு.. எனவே அவர்கள் குடும்பத்தாருக்கும், திமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, பாஜக பிரமுகர் அர்ஜூன மூர்த்தியும் முரசொலி செல்வத்துக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன மூர்த்தி, முரசொலி செல்வத்தின் இனிய குணங்களை வெளிப்படுத்தினார்.
இனிமையான பேச்சு: "அண்ணன் முரசொலி செல்வம் அரசியலுக்கு அப்பாற்பட்டு இனிமையாக பழகக்கூடியவர். சிறந்த எழுத்தாளர், பண்பாளர், அன்பின் உருவமானவர். மிகவும் நேசத்துடன் என்றும் உணர்ச்சி வசப்படாமல், கோபப்படாமல் அனைவரிடமும் இனிமையாக பேசக்கூடியவர். அத்தகைய உயர்ந்தவர் பிரிந்தது எனக்கும், என் குடும்பத்தாருக்கும் மிகப்பெரிய துன்பத்தை தந்தது" என்றார்.
பாஜக அர்ஜூன மூர்த்தியை பொறுத்தவரை, அன்று நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தவர்.. தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ரஜினியுடன் இணைந்தவர் ஆவார்.. ரஜினியின் மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் பயணித்தவர்.. ஆனால், ரஜினி அரசியல் கட்சி தொடங்கும் முடிவைக் கைவிட்டதால் அர்ஜுன மூர்த்தி, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி, இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியை தொடங்கினார்.
அதிக கவனம்: பின்னர் 2022ம் ஆண்டு, தனது கட்சியைக் கலைத்துவிட்டு மறுபடியும் பாஜகவில் ஐக்கியம் ஆனார்... இதையடுத்து, அர்ஜுன மூர்த்திக்கு பாஜகவில் சமூக ஊடகப் பிரிவு மாநில பார்வையாளர் பதவி வழங்கப்பட்டது. லோக்சபா தேர்தலின்போது, சிவகங்கை தொகுதியின் பொறுப்பாளராக அர்ஜுனமூர்த்தி நியமிக்கப்பட்டார். இப்படி பாஜகவுடன் தொடர்ந்து பயணித்து வரும் அர்ஜூன மூர்த்தி, கோபாலபுரம் வீட்டுக்கு வந்து, முரசொலி மாறனுக்கு அஞ்சலி செலுத்தியது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.
முன்னதாக, முரசொலி செல்வத்தின் உடலுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எம்.பி.தொல்.திருமாவளவன், பாஜக பிரமுகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், நடிகர் பிரஷாந்த், சங்கீதா விஜய், பல்வேறு அமைச்சர்கள், எம்.பி.கள், எம்.எல்.ஏ.கள் உள்பட அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications