முழு மென்டல்.. சீண்டிய பாரதியை கடுமையாக தாக்கிய அஸ்வத்தாமன்! இந்த 'பூச்சாண்டி'லாம் எங்ககிட்ட வேணாம்!
சென்னை : ஆளுநரைப் பார்த்து மென்டல் என்று சொல்லும் ஆர்.எஸ்.பாரதி முழு மென்டல் ஆகிவிட்டார். அவரை கீழ்ப்பாக்கத்தில் சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கடுமையாகச் சாடியுள்ளார்.
தி.மு.க சார்பில் நெல்லையில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆளுநர் ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை, 'மென்டல்' என, கடுமையாக விமர்சித்தார்.
மேலும், பாஜக தமிழகத்தில் இனி ஆர்ப்பாட்டம் செய்தால் அவர்களை சிறையில் அடைக்க வேண்டும். ஒரு நாள் சிறையில் இருந்தால் அதன் பிறகு கட்சியே வேண்டாம் என்று அவர்கள் ஓடி விடுவார்கள் என்றும் பேசினார்.

கவர்னர் - நம் வரிப்பணம்
நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, "ஆளுநருக்கு சம்பளம் கொடுப்பது நாம். அவர் டீ குடிப்பது முதல் சலவைக்குப் போடுவது வரை நம் வரிப்பணம். அவர் வீட்டு வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பது தமிழக அரசு. நம்முடைய வரிப்பணத்தில் அமர்ந்திருக்கும் அவர், திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார். ராஜ் பவனில் கூட்டம் நடத்தி திராவிடம் என்பதே கிடையாது என பேசுகிறார்" எனச் சாடினார்.

மெண்டல்
மேலும், "ஆளுநரும் ஐபிஎஸ் படித்துவிட்டுத்தான் வந்துள்ளார். ஐ.பி.எஸ் படித்தவர்களில் பாதிப் பேர் இப்படி மென்டல் ஆகத்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். எல்லோரையும் சொல்லவில்லை. ஐபிஎஸ் படித்தால் வேலைக்கு சேருவார்கள். அந்த வேலையை விட்டுவிட்டு அரசியலுக்கு வரும் அதிகாரிகள் மென்ட்டலாகத்தான் இருப்பார்கள்" என்று கடுமையாகப் பேசினார் ஆர்.எஸ்.பாரதி. ஆளுநர் ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை மென்டல்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு
இந்நிலையில், பாஜக மாநில செயலாளரும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் இதுதொடர்பாகப் பேசுகையில், "ஆளுநரை அவதூறாகப் பேசி அவரை பணி செய்ய விடாமல் தடுப்பது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் கடும் குற்றமாக கருதுகிறது. ஆகவே அந்த சட்டத்தின் கீழ் ஆர்.எஸ்.பாரதி மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடரப்படும்.

நாக்கை அடக்காமல்
பாஜகவின் அசுர வளர்ச்சியை கண்டு அச்சத்தில் திமுக தலைவர்கள் இப்படி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். திமுக பழையபடி வன்முறையை கையில் எடுக்கின்றனர் என்பதற்கு அந்தக் கட்சித் தலைவர்களின் சமீபத்திய பேச்சுகளே உதாரணமாக இருக்கின்றன. விமர்சனம் செய்வதில் ஒரு நாகரிகம் இருக்க வேண்டும். ஆனால் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் இனியும் நாக்கை அடக்காமல் இப்படி தாறுமாறாக பேசினால் எப்படி அடக்குவது என்பது எங்களுக்கு தெரியும்.

பயந்து ஓடுவோமா?
தாளமுத்து நடராஜன் போன்ற தொண்டர்களை தீக்குளிக்க வைத்து உயிரைப் பறித்து அதன் மூலமாக கட்சியை வளர்த்து பணத்தை கொள்ளை அடித்து குடும்பம் வளர்க்கும் கட்சி அல்ல பாஜக. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதற்காக தனது உயிரை நீத்தவர் பாஜக முன்னோடியான சியாமா பிரசாத் முகர்ஜி. நாட்டின் சொந்த அரசியல் தத்துவம் இம்மண்ணில் மலர வேண்டும் என்று அந்நிய சித்தாந்தங்களுக்கு எதிராக போராடி இந்திய மண்ணில் உயிர்த்தியாகம் செய்தவர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா. இப்படிப்பட்ட நெஞ்சுரம் மிக்க பாஜக தொண்டர்களை சிறையில் அடைத்தால் பயந்து ஓடி விடுவார்கள் என்று ஒரு கோழை சொல்லக்கூடாது.

முழு மெண்டல்
இப்படி பூச்சாண்டி காட்டும் வேலையை எல்லாம் வேறு எங்காவது அவர் வைத்துக் கொள்ளட்டும். பாஜகவிடம் இனி அவர் பயமுறுத்தல் வேலையெல்லாம் எடுபடாது. அடுத்தவரைப் பார்த்து மென்டல் என்று சொல்லும் ஆர்.எஸ்.பாரதி முழு மென்டல் ஆகிவிட்டார். அவரை கீழ்ப்பாக்கத்தில் சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications