அதிமுகவில் தீர்ந்தது பஞ்சாயத்து.. குஷியாக இருக்கும் பாஜக.. ஆனாலும் ஒரு வருத்தம்!
சென்னை: கூட்டணியில் உள்ள தங்களை கொஞ்சம் கூட கலந்தாலோசிக்காமல் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளதால் பாஜக வருத்தத்தில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது,
எனினும் அதிமுக பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பொன் ராதாகிருஷ்ணன் கூட்டணியில் தொடரக்கூடாது என நான் சொல்ல மாட்டேன். அதிமுக கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம்.
எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. கருத்துவேறுபாடுகள் என்பது அரசாங்க ரீதியாக எங்களுக்கும், அவர்களுக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அதற்காக கூட்டணியில் பிரச்சனை இருப்பதாக கருத தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ்.க்கு வாழ்த்து
அத்துடன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பிளவு வந்துவிடாதா என ஓநாய் போன்று காத்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் முதலமைச்சர் வேட்பாளர் பிரச்சனையை மிக சுமூகமாக தீர்த்துள்ளார்கள் என்றும் இதற்காக ஓ.பி.எஸ். அண்ணனுக்கும் தனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். எடப்பாடி பழனிசாமி சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

தேர்தல் வரும் போது மாறும்
ஆனால் இந்த பேட்டிக்கு முன்னர் நேற்று செய்தி ஊடகங்ளுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி கட்சி முதல்வர் வேட்பாளர், கூட்டணி அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட வேண்டிய விஷயம். தற்போது அதிமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். தேர்தல் நெருங்கி வரும் போது சூழ்நிலைகள் மற்றும் பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டு கூட்டணி அமைப்பார்கள். தமிழகத்தில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

எங்கள் கூட்டணி தான் ஆட்சி
பாஜகவை பொறுத்தவரை வரும் காலங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கலாம். தேர்தல் நெருங்கும் போது கட்சியின் தலைமை இதை முடிவு செய்யும். வரும் 2021 சட்டசபை தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சி அமையும். அது அதிமுகவாக இருக்கலாம். திமுகவாகவும் இருக்கலாம். அல்லது இரண்டு இல்லாத வேறு கட்சிகளாக கூட இருக்கலாம்" என்றார். இரு பேட்டிகளும் அடுத்தடுத்த நாளில் வந்துள்ளன.

இன்று பாராட்டு
பொன் ராதாகிருஷ்ணனின் பேட்டியை பார்க்கும் போது தங்களிடமும் கொஞ்சம் கலந்து ஆலோசித்திருக்கலாம் என்ற வருத்தத்தை பதிவு செய்வதாக நேற்றைய பேட்டிஇருந்தது. இன்றைய பேட்டியில் பாராட்டும் வகையில் உள்ளது. எனவே பேட்டிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இன்று அதை மறுத்துள்ளார் பொன் ராதாகிருஷ்ணன்.

ஒற்றுமையை விரும்புகிறது
இதனிடையே பாஜக தலைவர் முருகன், ஆரம்பம் முதலே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி வருகிறார். தமிழக பாஜகவை பொறுத்தவரை வலுவான ஒற்றுமையாக அதிமுக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிகிறது. அப்போது தான் தேர்தலில் திமுகவுடன் போட்டியிட முடியும் என்பதால் அதை விரும்புகிறது. அந்த வகையில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் கருத்து மோதல்கள் வந்த போது அதிருப்தியில் இருந்த நிலையில் இப்போது பிரச்சனைகள் தீர்ந்து விட்டதால் மகிழ்ச்சியில் இருப்பது தெரிகிறது.












Click it and Unblock the Notifications