இந்தி, நீட், காவிரி, ஜிஎஸ்டி.. தமிழர்களுக்கு எதிரானது பாஜக - பொங்கிய அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்
சென்னை: உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் மீது அக்கறையின்றி மத்திய பாஜக அரசு செயல்படுவதாக அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் பாஜகவின் வளர்ச்சி அதிமுக, தமிழ்நாடு, திராவிடத்துக்கே ஆபத்தானது என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

பொன்னையன் விளக்கம்
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் விளக்கமளித்ததாவது "எங்கள் கட்சியினுடைய பேரவைக் கூட்டம் ரகசியமானது. அங்கு என்ன பேசினாலும் ரகசியமாகவே இருக்கும். ஆனால், எப்படியோ அதை திரித்து, குறைத்து, மிகைப்படுத்தி வெளியிடுகிறார்கள். எங்களுக்கும் பாஜகவுக்கு இடையே நல்ல உறவு இருக்கிறது. எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அந்த அடிப்படையில் ஒரு கூட்டணி கட்சியாகதான் இருக்கிறோம். அவ்வப்போது தனித்தன்மையோடு செயல்பட்டாலும்கூட கூட்டணி ஓரளவு தொடர்கிறது.

இந்தியை திணிக்க நினைக்கிறது பாஜக
கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கொள்கை அளவிலே பாஜகவின் கொள்கைகள் வேறு, எங்களுடையது வேறு. அதிமுக தமிழ்நாட்டின் நலனுக்காக சில உயர் கொள்கைகளை வைத்துள்ளது. ஒன்று இந்தியை ஏற்க மாட்டோம் என்பது எங்களுடைய தலையாய கொள்கை. தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க வேண்டும் என்பது பாஜகவின் தலையாய கொள்கை. அடுத்து சிபிஎஸ்சி என்பது அல்லாமல் சமச்சீர் கல்வியில் ஆங்கிலம், தமிழ் மட்டுமே பயிற்சி மொழி என்ற முறையில் பன்னெடும் ஆண்டுகளாக செயல்படுகிற தமிழகத்தில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை மட்டுமே ஒட்டிய நீட் தேர்வை ஏற்க மாட்டோம் என்பது எங்கள் கொள்கை.

நீட் பிரச்சனை
தமிழர்கள், மாணவர்கள் என்ன ஆனாலும் சரி, தேசியக் கொள்கை என்ற முறையில் நீட் கட்டாயமாக தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படும் என்ற நிலைபாட்டை எடுத்து நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டது பாஜக. எங்களுக்கு அதிலே உடன்பாடு இல்லை. முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழ்நாட்டின் நலனுக்காக நாங்கள் உச்சநீதிமன்றத்தில் பெற்ற ஆணையை கூட நடைமுறைபடுத்த மைய அரசு தயங்குகிறது. தமிழ்நாடு பாஜக அதற்காக போராடவில்லை. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பாஜக எங்களுடனும் இணையவில்லை. தனியாகவும் போராடவில்லை.

காவிரி விவகாரம்
காவிரி பிரச்சனையில் 275 டிஎம்சி தண்ணீரை உரிமையின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தந்தது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்ற தீர்ப்பை ஒவ்வொருவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தனி மனிதன் ஒருவன் உச்சநீதிமன்ற தீர்ப்பை காலில்போட்டு மிதித்தால் அவனுக்கு சிறை தண்டனை. ஆனால், அந்த டெல்லியில் ஆளுகிற மைய பாஜக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை புறம்தள்ளிவிட்டு காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு தரக்கூடாது என்று கங்கனம் கட்டிக்கொண்டு செயல்படும் கர்நாடக பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறது.

தமிழனத்தின் மீது பாஜக அக்கறையில்லை
இது கொள்கை ரீதியான எங்களின் வாழ்வாதார பிரச்சனை. இதில் எங்களுடன் பாஜக ஒத்துப்போகவில்லை. பாலாற்று பிரச்சனையிலும் அப்படிதான். ஈழப்பிரச்சனையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம். ஆனால் உலகில் எங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழினத்தின் மீது அக்கறையின்றி செயல்படுகிறது பாஜக அரசு. இதில் நாங்கள் சிரிதும் அவர்களுடன் ஒத்துப்போகவில்லை.,

தமிழ்நாடு பாஜக
இதைதான் நான் சுட்டிக்காட்டினேன். இரட்டை வேடம், இரட்டை நிலை என்று. ஆகவே தமிழ்நாட்டை பொறுத்தவரை உயிர்நாடி பிரச்சனைகளான மொழிப்பிரச்சனை, ஈழப்பிரச்சனை, நதிநீர் பிரச்சனை, மாநிலங்களுக்கு அதிக பண அதிகாரம் தர வேண்டும் என்ற பிரச்சனை, ஜிஎஸ்டி கொண்டு வந்து விற்பனை வரி வருமானம் அவ்வளவையும் சுரண்டி சென்றுவிட்ட மைய அரசு கொடுக்க வேண்டியதை கூட கொடுக்காத பிரச்சனைக்காக தமிழ்நாடு பாஜக போராடவில்லை. தமிழ்நாடு மக்கள் நலனுக்காக பாடுபடவில்லை. இது உண்மைதானே. இதைதான் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.

நாடறிந்த உண்மை
பாஜக அதிமுகவை பயன்படுத்தி வளருகிறது என்று சொல்ல மாட்டேன். அவர்களின் கொள்கைகளை தமிழ்நாட்டு மக்களுக்காக மாற்றிக்கொண்டால் பாஜக தானாகவே தமிழ்நாட்டில் வளரும். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடாமல் பாடுபடுவோம் என்று கூறிக்கொண்டிருக்கும் பாஜகவின் கூற்றுகளை, உண்மை நிலையை கண்டறிய வேண்டும். அதை மக்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் சொல்ல வேண்டும் என்பது எனது கருத்து. தேசிய கட்சிகள் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் தமிழ் மக்களுக்கான நலனுக்கான கொள்கைகளை கடைபிடிக்கும் நாள் என்று வருமோ, அன்றிலிருந்து அவர்கள் வளருவார்கள். உண்மையிலேயே தமிழ்நாடு பாஜக தமிழ்நாடு மக்களுக்காக பாடுபடவில்லை என்பது நாடறிந்த உண்மை.












Click it and Unblock the Notifications