திருப்பரங்குன்றம்.. மாமன் மச்சானாக இரு தரப்பும் வாழ்கின்றனர்.. பாஜக நாடகமாடுகிறது.. சேகர்பாபு பேட்டி
சென்னை: திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் மாமன் மச்சானை போல் சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாஜகவினர் தான் என்று கூறியுள்ள சேகர்பாபு, அரசியல் லாபத்திற்காக பாஜக நாடகமாடுவதாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. நீண்ட காலமாக இரு மதத்தைச் சேர்ந்த மக்களும் எந்தவித சிக்கலும் இல்லாமல் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழிபாடு நடத்தி வந்தனர். இதனிடையே சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி இஸ்லாமிய அமைப்பினர் சில கந்தூரி கொடுக்க ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு வழிபாடு நடத்த முயற்சித்தனர்.

இதனை எதிர்த்து பாஜக மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, சிக்கந்தர் தர்காவில் ஆய்வு நடத்திய போது, மலையில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனை கண்டித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த முயன்ற போது, காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல் மதுரையில் கடந்த 2 நாட்களாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும் நீதிமன்ற உத்தரவுடன் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இந்து அமைப்புகள் தரப்பில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக முருகன் கோயிலுக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று மலைக்கு செல்லவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் திருப்பரங்குன்றம் பகுதியில் இயங்கி வந்த கடைகளும் திறக்கப்பட்டு, சூழல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், வடமாநிலத்தை போல் இங்கும் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். ஆனால் பெரியார் மண்ணில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு ஒரு காலமும் அனுமதி மாட்டோம். 1920, 1930, 1958, 1975, 2004, 2017, 2021 என்று பல்வேறு கட்டங்களில் இதுதொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதியோடு திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவுள்ளேன். அங்கே இஸ்லாமியர்களும், இந்துக்களும் மாமன் மச்சான்களாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை அந்நியப்படுத்தி பாஜக தேர்தல் லாபம் பார்க்க நினைக்கிறார்கள். திருப்பரங்குன்றம், தர்கா பிரச்சனையால் பாஜகவின் வாக்கு சதவிகிதம் 2026ல் பூஜ்ஜியத்தை அடைந்தாலும் ஆச்சரியமில்லை. நேற்று கூடிய கூட்டத்தை பார்த்திருப்பீர்கள். ஒரு மதத்திற்கும், இனத்திற்கும் எதிராக தான் கோஷம் எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவில் பொறுப்பில் இருப்பவர்களே மதத்தால், இனத்தால் மக்களை வேறுபடுத்தி கொண்டிருக்கிறார். ஏற்கனவே இதுவரை என்ன வழிபாடு பின்பற்றப்பட்டு வந்ததோ, அது தொடரும். பாஜகவின் எச்.ராஜாவுக்கு மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்பதே நோக்கம். நேற்று நடைபெற்றது ஒரு தேவையில்லாத போராட்டம். திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்தும் முயற்சி இது. அங்கு போராடியவர்களை இந்து அமைப்பினர் என்று கூறக் கூடாது. ஆர்ப்பாட்டம் நடத்தியது பாஜகவினர் தான் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications