காஷ்மீர் பைல்ஸ் போல் விரைவில் "தமிழ்நாடு பைல்ஸ்"... அப்றம் இருக்கு!- கதையை சொன்ன பாஜக கல்யாணராமன்
சென்னை: காஷ்மீர் பைல்ஸ் படத்தை எடுத்த இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி விரைவில் தமிழ்நாடு பைல்ஸ் என்ற படத்தை இயக்க இருப்பதாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கடந்த மாதம் நாடு முழுவதும் வெளியானது.
விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, முன்னணி நடிகர் அனுபவம் கேர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் அந்த படம்தான் தேசிய அரசியலில் விவாதப் பொருளாக மாறியது.

பிரதமர் மோடியின் பாராட்டை பெற்ற படம்
80 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஜம்மு காஷ்மீர் வன்முறை சமயத்தில் அங்கிருந்து காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதாக இந்த படத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை அண்மையில் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியையும் படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினார்.

சலுகை கொடுத்த பாஜக மாநில அரசுகள்
இந்த படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், கோவா, திரிபுரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா, குஜராத், உத்தராகண்டில் வரி விலக்கு அளிக்கப்பட்டன. மத்திய பிரதேசத்தில் இந்த படத்தை பார்க்க செல்லும் போலீசாருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டது. அதே போல் மற்ற சில மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்ப்பதற்காக விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கடும் எதிர்ப்பு
இந்த படம் குறித்து கேரள மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில், "காஷ்மீர் தாக்குதல்களின்போது பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் அப்போது ஆளுநராக இருந்த பாஜக - ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஜக்மோகன் அவர்களை காஷ்மீரை விட்டு வெளியேற சொன்னார்." எனக் குற்றம்சாட்டியது. அதே போல் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு பைல்ஸ்
இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் பொதுமேடைகளிலும் மதவெறி கருத்துக்களை தெரிவித்ததற்காக 2 முறை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்ட பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி "தமிழ்நாடு பைல்ஸ்" என்ற படத்தை எடுக்க போகிறார். அதில் திராவிட கட்சிகள் / அமைப்புகள் எப்படி திட்டமிட்டு சுதந்திர போராட்டத்தை குலைப்பதற்காக ஆங்கிலேயர் திட்டமிட்டு உருவாக்கினர் என்ற உண்மை வெளிப்படும். அப்போ இருக்கு மியூசிக்..." என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications