வாழைப்பழம் மாதிரி பேசுனாரு.. கடைசில அல்வா கொடுத்துட்டாரு! பாஜக பிரபலம் பார்த்த வேலை.. சிக்கிட்டாரு!
சென்னை: சென்னை அருகே பல்லாவரம் பகுதியில் தேசிய புலனாய்வு முகமை, வருமான வரித் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக பாஜக பிரமுகர் மற்றும் அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். வெறும் விசிட்டிங் கார்டை கொடுத்து லட்சம் லட்சமாய் ஆட்டைய போட்ட தம்பதி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் கைது, போலி வங்கி மோசடி என பல மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதே நேரத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் பல ஆண்டுகளாய் நடந்து தான் வருகிறது.

எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அரசு வேலையை பொறுத்தவரை தேர்வுகள் மூலமாகவே நிரப்பப்படுகிறது. ஆனால் பல இடங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுபவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆனால் மக்கள் ஏமாறுவதற்கு தயாராக தான் இருக்கிறார்கள் என்பது போல மோசடி பேர்வழிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் சென்னை அருகே அரங்கேறி இருக்கிறது. மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று தலைமறைவான பாஜக பிரமுகரையும் அவரது மனைவியையும் போலீசார் தேடி வருகின்றனர். பல்லாவரம் அருகே பொழிச்சலூர் துரைக்கண்ணு தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். பாஜக செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை துணை தலைவராக இருக்கிறார்.
இவரது மனைவி அஸ்வினியும் பாஜக பிரமுகர் தான். இவர் பாஜக செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக இருக்கிறார். அதே பகுதியில் அலுவலகம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார் ஜெயராமன். யங் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா என்ற பெயரில் நடத்தி வந்த அலுவலகத்தில், தான் ஒலிம்பிக் விளையாட்டு கமிட்டி உறுப்பினர் என்றும் இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் டீமில் தான் ஒரு நடுவர் என்றும் விசிடிங் கார்டுகளை தயார் செய்து வைத்திருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் தான் பாஜகவின் மிக முக்கியமான பொறுப்பில் இருப்பதால் மத்திய அமைச்சர்கள் தனக்கு நெருக்கம் என போலியாக புகைப்படங்களை உருவாக்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. தன்னை சந்திக்கும் நபர்களிடம் என்ஐஏ, வருமான வரித்துறை, உளவுத்துறை, ரயில்வே, அமலாக்கத்துறை ஆகியவற்றில் விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அளந்து விட்டு இருக்கிறார். அதனையும் உண்மை எண்ணிய நம்பிய பலர் பணத்தைக் கொடுத்திருக்கின்றனர்.
குறிப்பாக வேலூரைச் சேர்ந்த லோகேஷ் குமார் தனக்கு மத்திய அரசு வேலை வாங்கி தருமாறு கூறி 17 லட்சம் ரூபாய் வரை ஜெயராமனிடமும் அவரது மனைவி அஸ்வினி இடமும் கொடுத்து இருக்கிறார். மேலும், அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்த ப்ரியா என்பவரும் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்களாக வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி இருக்கின்றனர். தொடர்ந்து கேட்டபோது இன்று போய் நாளை வா என இழுத்தடித்துள்ளனர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லோகேஷ் குமார் இது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புகார் கொடுத்தார். தற்போது இந்த வழக்கு சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பாஜக பிரமுகரான ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி ஆகியோரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications