நெருக்கமா? கிளம்பிய பேச்சை உடைத்த அண்ணாமலை.. திமுக மீது தாக்கு- நம்பர்ல மட்டும் கவனம் செலுத்தாதீங்க!
சென்னை : தமிழகம் வந்த பிரதமர் மோடியுடன் திமுக அரசு இணக்கம் காட்டியது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை முன்வைத்து திமுக அரசை சீண்டியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
நேற்று தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடியுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெருக்கமாகப் பேசிச் சிரித்தார். அதேபோல, இன்று நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பிரதமரை பாராட்டிப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
கடந்த முறை பிரதமர் மோடி சென்னை வந்தபோது, அவர் இருந்த மேடையிலேயே மத்திய அரசை விமர்சித்துப் பேசியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், இந்த முறை அப்படியான நிகழ்வுகள் நடக்கவில்லை.

சீண்டிய அண்ணாமலை
பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பரஸ்பர இணக்கம் காட்டியதும், புகழ்ந்து பேசியதும் அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்தது. பாஜக திமுக உடன் நட்பான அணுகுமுறையைக் கையாள்கிறதா எனக் கேள்விகள் எழுந்த நிலையில், அதை உடைக்கும் விதமாக ஒரு செயலைச் செய்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. 'அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையிலும், அரசியலா?' என கேள்வி எழுப்பி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு பதில் அளித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அண்ணாமலை.

அமைச்சர் பொன்முடி
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சில கருத்துக்களை முன்வைத்தார். அதை தெளிவுபடுத்த வேண்டியது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கடமையாக உள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகம் என்றார். உண்மைதான், அது இன்று மட்டுமல்ல 1967 க்கு பின்பு மட்டுமல்ல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அறிவாற்றலின் முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளனர் நமது முன்னோர்கள்.

தேர்ச்சி குறைவு
மேற்கத்திய கல்வி முறையே தமிழகத்தில் கல்வியின் தொடக்கம் என்று நம்பும் சிலரின் கவனத்திற்கு: 1800களின் தொடக்க காலத்திலேயே திராவிடம் என்ற வார்த்தை புழக்கத்தில் வருவதற்கு முன்பே தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் கல்வி பயின்று வந்துள்ளனர் என்பதற்கான சான்று உள்ளது. ஆனால் இன்றோ தமிழகத்தில் பொறியியல் பயின்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்ற உண்மையை அமைச்சர் மறுக்க மாட்டார் என்று நம்புகிறோம், தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது, அண்ணா பல்கலைக்கழகத்தில் 2016ஆம் ஆண்டு 1,65,417 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 2020ஆம் ஆண்டு அது 85,747 ஆக குறைந்து விட்டது.

கவனம் செலுத்தவில்லை
சுமார் 50 சதவீதம் வீழ்ச்சி, மேலும் 2011ஆம் ஆண்டு நடந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வில் வெறும் 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதாக செய்திகள் வந்தது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழக பொறியியல் கல்லூரியில் நுழையும் எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதன் வெளிப்பாடாகவே இது தெரிகிறது. தனது உரையை முடிக்கும்போதே உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தரத்திலும் கவனம் செலுத்துங்கள்
தமிழகத்தில் கல்வி தரத்தை உயர்த்தவும் அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடையவும் சமக்ர சிக்ஷா நிதி மூலமாக கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 6,664 கோடி ரூபாய் நமது மத்திய அரசு வழங்கியுள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம், 2015ஆம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தமிழகத்தில் 3,96,942 மாணவர்களுக்கு PMKVY இத்திட்டத்தின் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். மீண்டும் ஒருமுறை எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே நமது அரசை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications