விசாரணை கைதி மரணம் “திமுக ஆட்சியில் லாக்கப் டெத்- இன்று கொடுங்கையூர்.. நாளை?” பாய்ந்து வந்த எச்.ராஜா
சென்னை : சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக்கு அழைத்து வரும்போதே ராஜசேகர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், "தி.மு.க ஆட்சியில் தொடரும் லாக்கப் மரணம். இன்று கொடுங்கையூர். நாளை?" என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா.

விசாரணைக் கைதி மரணம்
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்ற அப்புவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொடுங்கையூர் போலீசார் ராஜசேகரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். இதையடுத்து ராஜசேகரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

லாக்கப் மரணம்?
போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த ராஜசேகரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ராஜசேகரின் மரணம் தொடர்பாக சந்தேகம் கிளப்பப்படுகிறது. ராஜசேகரின் மரணம் போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட லாக்கப் மரணம் என பாஜக முன்னணி தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

விசாரணை
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது தொடர்பாக சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, காவல் இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில்
கடந்த ஏப்ரல் மாதம் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. விக்னேஷ் கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எச்.ராஜா ட்வீட்
கொடுங்கையூர் காவல் நிலைய போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் மரணம் லாக்கப் மரணம் எனக் குறிப்பிட்டு பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் செய்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், "தி.மு.க ஆட்சியில் தொடரும் லாக்கப் மரணம். இன்று கொடுங்கையூர். நாளை?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் எச்.ராஜா.












Click it and Unblock the Notifications