'கொங்குநாடு' கோரிக்கைக்கு ஆதரவு? இலக்கிய ஆதாரங்களுடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விளக்கம்
சென்னை: கொங்கு நாடு தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலக்கியங்களில் இருந்து ஆதாரங்களை மேற்கோள்காட்டி பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது விவாதப் பொருளாகி உள்ளது.
மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட எல். முருகன் பற்றிய மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கொங்குநாடு என குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் கொங்குநாடு என ஒரு மாவட்டம் இல்லை. இந்த நிலையில் கொங்குநாடு என மத்திய அரசு ஏன் குறிப்பிட்டது என கேள்வி எழுந்தது.

தமிழகம் 2 ஆக பிரிப்பா?
தமிழகத்தை 2 ஆக பிரித்து கொங்குநாடு தனி மாநிலம் அல்லது யூனியன் பிரதேசமாக்க பா.ஜ.க. முயற்சிக்கிறதா? என்கிற விவாதமும் நடந்து வருகிறது. ஒன்றிய அரசு என மத்திய அரசை தமிழகத்தில் ஆளும் திமுக அரசு குறிப்பிட்டு வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில்தான் கொங்குநாடு தனி மாநிலம் உருவாக்கப்படலாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொங்கு நாடு கோரிக்கைக்கு ஆதரவு?
இது தொடர்பாக இன்று வெளியான நாளிதழ் செய்தியை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன். அத்துடன் கொங்குநாடு தொடர்பான பல்வேறு இலக்கிய ஆதாரங்களையும் வானதி சீனிவாசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் வானதி சீனிவாசன், கொங்கு தனி மாநில கோரிக்கையை ஆதரிக்கிறாரா? என அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கொங்கு நாடு
வானதி சீனிவாசனின் ஃபேஸ்புக் பதிவு: கொங்கு தேர் வாழ்க்கை என்று இறையனாரின் சங்கப்பாடல் காலம் முதல் கொங்கு நாடு என்ற வரையறை உண்டு. அண்ட நாடு, அரையன் நாடு, ஆறைநாடு, ஆனைமலை நாடு, ராசிபுர நாடு, ஒருவங்க நாடு,காங்கேயம் நாடு, காஞ்சிக்கோயில் நாடு, காவடிக்கன் நாடு, கிழங்கு நாடு, குறும்பு நாடு, தட்டையன் நாடு, தலையன் நாடு, திருவாவினன் குடி நாடு, தென்கரை நாடு, நல்லுருக்கன் நாடு, பூந்துறை நாடு, பூவாணிய நாடு, பொன்களூர் நாடு, மணல் நாடு, வடகரை நாடு, வாரக்கண் நாடு, வாழவந்தி நாடு, வெங்கால நாடு என்று 24 நாடுகள் உள்ளடக்கிய கொங்கு நாடு என்று கொங்கு மண்டல சதகங்களில் குறிப்பு இருக்கிறது.

புறநானூறு
ஆகெழு கொங்கர் என்று பதிற்றுப்பத்திலும், கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே என்று புற நானூற்றிலும் கொங்கு தேசம் பற்றிய விரிவான சித்திரம் தமிழ் சங்ககால இலக்கியம் முழுக்க பரந்து இருக்கிறது. நாயக்கர்களின் காலத்திலும் கொங்கு பாளையப்பட்டுக்கள் என்று கொங்கு பகுதிக்கான வரி நடைமுறைகள் பிற பகுதிகளை விட தனியாகத்தான் இருந்திருக்கிறது. கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற பொருளில் மூதுரையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு வானதி சீனிவாசன் பதிவிட்டுளார்.












Click it and Unblock the Notifications