அதிமுக கூட்டணி: தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு 'டெல்லி' வாய்ப்பூட்டு- ஓபனாக உடைத்த வானதி சீனிவாசன்!
சென்னை: அண்ணா திமுக கூட்டணியை முறித்துக் கொண்டது தொடர்பாக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கக் கூடாது என டெல்லி தலைமை தங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக பாஜக மகளிரணியின் தேசிய தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் சந்தேக விமர்சனங்களை முன்வைத்தன.

எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்: இதனையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக நாள்தோறும் செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்புகளின் போது, பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது. இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். 2024 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக மெகா கூட்டணியை அமைக்கும் என உறுதியாக கூறி வருகிறார். மீண்டும் மீண்டும் பாஜகவுடனான கூட்டணி குறித்து கேள்விகள் எழுப்புவது அர்த்தமற்றது எனவும் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக அதிமுக இருக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
அதிமுக குறித்து பேச்சு இல்லை: தமிழ்நாடு பாஜகவைப் பொறுத்தவரையில் அதிமுக கூட்டணி முறிவு குறித்து மிகப் பெரும் மவுன விரதத்தைக் கடைபிடித்து வருகின்றனர். பாஜகவின் 2-ம் கட்டத்தில் விபி துரைசாமி போன்ற ஒரு சிலர்தான் அதிமுக கூட்டணியை முறித்தது பற்றி கருத்து தெரிவித்தனர். ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட சீனியர் தலைவர்கள் யாருமே இந்த கூட்டணி முறிவு குறித்து பகிரங்கமாக எந்த ஒரு கருத்தையும் சொல்ல மறுக்கின்றனர்.
மவுனமாக கடக்கும் பாஜக: சென்னையில் நேற்று முன்தினம் பாஜக மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போதும் கூட அதிமுகவுடனான கூட்டணி முறிவு குறித்து பட்டும் படாமல் பொதுவான கருத்துகளையே தெரிவித்தனர்.
தேசிய தலைமையின் உத்தரவு: இந்நிலையில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அதிமுக கூட்டணியை முறித்ததை மையாக வைத்து சுற்றி சுற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டன. அத்தனை கேள்விகளுக்கும் தேசிய தலைமையானது இதுபற்றி இப்போது எதுவும் பேச வேண்டாம் என சொல்லி இருக்கிறது. அதையே நாங்கள் கடைபிடிக்கிறோம். ஆகையால் கூட்டணி தொடர்பாக நாங்கள் எந்த ஒரு சொந்த கருத்தையும் சொல்ல முடியாது. கூட்டணி பற்றி டெல்லி தேசிய தலைமை மட்டும்தான் முடிவெடுக்கும்; அறிவிக்கும்; டிசம்பர் மாதம் வரை பொறுத்திருக்க வேண்டும் எனத் திட்டவட்டமாக தெரிவித்தார் வானதி சீனிவாசன்.
டெல்லி போட்ட வாய்ப்பூட்டு: மேலும் அதிமுக கூட்டணி முறிந்துவிட்ட நிலையில் தற்போது பாஜக தலைமையில் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன என்ற கேள்விக்கும் கூட, இப்போது எந்த ஒரு தெளிவான சூழ்நிலையும் இல்லை; நிலைமை தெளிவாகும் போது அனைத்துக்கும் பதில் கிடைக்கும். இப்போது தேசிய தலைமை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் எந்த ஒரு கருத்தையும் வெளிப்படுத்த முடியாது என மீண்டு மீண்டும் கூறினார் வானதி சீனிவாசன். அதாவது தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு டெல்லி தலைமை கடுமையான உத்தரவுடன் 'வாய்ப்பூட்டு' போட்டுவிட்டதாலேயே தமிழ்நாடு பாஜக தலைவர்கள் கனத்த மவுனம் காக்கின்றனர் என்பதையே வானதி சீனிவாசனின் இந்த பேட்டி வெளிப்படுத்தியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications