கமலை பார்த்தால் பரிதாபமா இருக்கு.. போகிற போக்கில் ஸ்டாலினையும் விமர்சித்து பாடல்.. பாஜக எஸ்ஆர் சேகர்
சென்னை: கமல்ஹாசனை நான் ரொம்ப பரிதாபத்தோடு பார்க்கிறேன் என தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் 4 ஆண்டுகள் கழித்து விக்ரம் படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியானது. கமல் குரலில் பத்தல பத்தல பாடலில் மத்திய அரசை விமர்சித்து பாடியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறுகையில் கமல்ஹாசனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவரை நான் மிகவும் பரிதாபத்துடன் பார்க்கிறேன். ஒரு சிறந்த நடிகராக இருந்து அரசியல் கட்சியை ஆரம்பித்து எல்லாவற்றிலும் தோற்று போனார்.

டிவி புரோகிராம்
ஒரு டிவி புரோகிராமிலும் தோற்றுபோய் செல்லாக்காசு ஆகிவிட்டார். யாரை சொன்னால் மக்கள் இவரை திரும்பி பார்ப்பார்கள் என்பதை யோசித்து பிரதமர் மோடியை சொல்லியுள்ளார். பிரதமர் மோடி மிகப் பெரிய அளவில் எல்லாருக்கும் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மிகப் பெரிய வியாபார பொருளாக பலருக்கு ஆசி அளித்துக் கொண்டிருக்கிறார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரி
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஒரு கவியரங்கம் நடந்தது. அதில் கவிஞர் கண்ணதாசன் கலந்து கொண்டார். கண்ணதாசன் தன்னுடைய கவிதையை எழுதி ஒரு மாணவன் கையில் கொடுத்துவிட்டு அந்த மாணவன் எழுதிய கவிதையை இவர் படித்தார். அப்போது ஏராளமான கைதட்டல்கள் கிடைத்தன.

வாய்ப்புக்காக
ஆனால் இவருடைய கவிதையை படித்த அந்த மாணவனுக்கு கைதட்டலே இல்லை. அப்போதுதான் கண்ணதாசன் சொன்னார், கவிதையை யார் படிக்கிறார்கள் என்பதுதான் முக்கியமே தவிர அதில் உள்ள கருத்து இரண்டாவதுதான். அது போல் கமல்ஹாசனுக்கு மோடியை தாக்கி பாட்டு எழுதினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மோடி மீது பாய்கிறார்.

முதல்வர் ஸ்டாலினையும் விமர்சித்த கமல்
அவருக்கு வேற வழியில்லை. கடைசியில் மோடி அவரை காப்பாற்றுவார் என நான் நினைக்கிறேன். மோடியை சொன்னதன் மூலமாக அவருக்கு வாழ்வு கொஞ்சம் கிடைக்கும். கடைசியாக சாவி இங்கே திருடன் கையில் என அந்த பாட்டில் ஒரு வார்த்தையை கூறியுள்ளார். முதல் வரியில் ஒன்றிய அரசு என சொல்லிவிட்டு மோடியின் மூலமாக கொஞ்சம் புகழ் பெறுவோம். மேலும் தன்னுடைய அடி உள்ளத்தில் உள்ள உண்மையை சாவி இங்கே திருடன் கையில் என கூறி முதல்வர் ஸ்டாலினையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போய் இருக்கிறார் என்பதை மட்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியும்படி சொல்கிறேன் என எஸ் ஆர் சேகர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications