Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசு முன்னிறுத்தும் ஆதீனங்களால் பாஜகவுக்கு ஆதாயமா? தமிழ்நாட்டில் காலூன்றத்தான் முடியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் தமிழ்நாட்டின் 21 ஆதீனங்களின் மடாதிபதிகள் முன்னிறுத்தப்பட்டனர்- தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்பட்ட 1947-ம் ஆண்டு செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது என்பதெல்லாம் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் மத்திய அரசு பெருமை சேர்த்த நிகழ்வுகள் என்கின்றனர் பாஜகவினர். இதன் பின்னால் இருக்கும் அரசியல் கணக்குகள் இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.

இந்தியாவை 2-வது முறையாக பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் மாநிலங்களில் பாஜக வலுவாக காலூன்றவே இயலாத மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்து வருகிறது. 2109-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 5 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெல்லவில்லை. 2014-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் 7 இடங்களில் போட்டியிட்ட பாஜக 1 இடத்தில்தான் வென்றது. அதற்கு முந்தைய 2009- தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியின் தயவால் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் வென்றது. தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் என்பது 2% முதல் அதிகபட்சம் 5%-க்குள்ளாக மட்டுமே இருந்து வருகிறது.

BJPs Strategy with Tamilnadu Aadheenams for the Loksabha Elections 2024

மத்தியில் 3-வது முறையாக ஆட்சியை தொடர்ந்து தக்க வைக்க ஹாட்ரிக் வெற்றிக்கு பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இந்த வியூகங்களில் தமிழ்நாட்டில் எப்படியும் கணிசமான இடங்களைப் பெறுவதும் ஒன்று. இதனால் கிடைக்கிற அத்தனை வாய்ப்புகளையும் சாதகமாக்கிக் கொள்ள பாஜக நினைக்கிறது. இதுதான் அரசியலும்கூட.

தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் ஆச்சரியமூட்டும் வகையில் 21 தமிழ்நாட்டு ஆதீனங்களின் மடாதிபதிகள் வரவழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். 1947-ல் தமிழ்நாட்டு திருவாவடுதுறை ஆதீனம், நேருவிடம் கொடுத்த செங்கோல் பிரம்மாண்டமானதாக்கப்பட்டு லோக்சபா சபாநாயகர் இருக்கையின் அருகே நிறுவப்பட்டது. டெல்லி புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தமிழ் பாடல்கள் ஓதப்பட்டன. பிரதமர் மோடியும் தமது உரையில் சோழர் கால பெருமையை பேசினார்.

பொதுவாக தமிழ்நாட்டு பிரச்சனைகள், உரிமைகள் சார்ந்த விஷயங்களில் பாஜக மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுவது உண்டு. மத்தியில் ஆளும் பாஜகவும் தமிழ்நாடு சார்ந்த விஷயங்களில் பொதுவான மக்கள் உணர்வுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து கொண்டே இருக்கிறது. இதனை தமிழ்நாடு பாஜக தலைவர்கள் நியாயப்படுத்தவும் செய்கின்றனர். இது தமிழ்நாட்டில் பாஜகவை வெகுதொலைவுக்கு அன்னியப்படுத்தி கொண்டே செல்கிறது என்கிற களநிலவரம் இன்னமும் உள்ளூர் மற்றும் இந்திய பாஜகவினருக்கு புரிபடாமல் இருப்பதுதான் ஆச்சரியம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

BJPs Strategy with Tamilnadu Aadheenams for the Loksabha Elections 2024

இப்போதும் கூட தமிழ்நாட்டு மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ தமிழ்நாட்டு ஆதீனங்களுக்கு அதீத முக்கியத்துவம் தந்துள்ளது மத்திய பாஜக அரசு. இதில் எந்த ஒரு பிழையும் இல்லை. பெருமைக்குரியதுதான். ஆனால் தமிழ்நாடு பாஜகவினரோ, மத்திய அரசின் இந்த வியூகம் வாக்கு வங்கி அரசியலுக்கு, குறிப்பாக 2024 லோக்சபா தேர்தலுக்கு உதவக் கூடும் என கணக்குப் போட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.

அதேநேரத்தில் பாஜகவினரின் இந்த கணக்கு எடுபடாது என்கிற பதிலையும் எதிர்க்கட்சிகள் தரப்பு முன்வைக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 21 ஆதீனங்கள் இருந்தாலும் அவற்றின் மக்கள் செல்வாக்கு என்பது துளியும் இல்லாத ஒன்று. மக்களிடம் இருந்து விலகிய ஒரு அமைப்பாகவே ஆதீனங்கள் காலந்தோறும் இருந்து வருகின்றன. ஆதீனங்கள் என்பவை மக்களை ஒடுக்குகிற பண்ணையார்தன நிறுவனமாகத்தான் இருந்து வருகின்றன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்துக் கொண்டு, பெரும் செல்வங்களை வைத்துக் கொண்டு கடைகோடி மக்களின் நலன்களுக்கு கிஞ்சிற்றும் எதுவும் செய்யாத ஒரு கட்டமைப்பாகவே ஆதீனங்கள் இருந்து வருகின்றன. அப்படியான ஆதீனங்கள் அரசியலில் இதுநாள் வரை தலைகாட்டவே அஞ்சித்தான் இருக்கின்றன. இதற்கு காரணம் தமிழ்நாடு மதம் சாராத, மதத்தை விலக்கிய அரசியலை மட்டுமே மையமாகக் கொண்டதாக மட்டுமே பயணிக்கிறது என்பதையும் எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது கர்நாடகா மாநிலத்தை எடுத்துக் கொண்டால் மடாதிபதிகள் (லிங்காயத், ஒக்கலிகா), மக்களிடையே செல்வாக்கு செலுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர். தேர்தல் அரசியலில் மடாதிபதிகளின் ஆதரவைப் பெறவும் தக்க வைக்கவும் கட்சிகள் படாதபாடுபடுகின்றன. கர்நாடகா மடாதிபதிகள், மக்கள் வாக்கு செலுத்துவதில் ஒருவகையில் செல்வாக்கும் செலுத்துகின்றனர். ஆனால் தமிழ்நாட்டு ஆதீனங்கள், மடாதிபதிகளுக்கும் தேர்தல் அரசியலுக்கும் துளி கூட தொடர்பும் இல்லை; ஆதீனங்கள் சொத்துகளையும் செல்வத்தையும் தக்க வைக்க அரசியல் சார்புகளை விரும்புவதும் கிடையாது என்கிறனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

BJPs Strategy with Tamilnadu Aadheenams for the Loksabha Elections 2024

ஆகையால் பாஜக என்னதான் ஆதீனங்கள், மடங்கள், தமிழ் மறைகள், சோழர் காலப் பெருமிதம், தமிழ்ப் பேரரசுகள் பெருமிதம், பழந் தமிழர் பெருமை , திருக்குறள், பாரதியார் பாடல்கள் என எதனையாவது கையில் எடுத்து வாக்கு அரசியலில் வெல்லலாம் என கணக்குப் போட்டால் கானல் நீர்தான் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஏனெனில் தமிழ்நாட்டு அரசியல் என்பது விசித்திரமானது. இதற்கு ஒரு உதாரணம்... ஈழத் தமிழர் விடுதலைப் போருக்காக எண்ணற்ற தியாகங்களை செய்தவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள்; ஈழத் தமிழர் விடுதலைப் போருக்கு ஆதரவாக தீக்குளித்து மாண்டவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள். ஆனால் ஓட்டு போடும் போது, ஈழப் பிரச்சனைக்காக போராடியவர்கள், போராடும் கட்சி என்கிற சிந்தனை தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் செல்வாக்கு செலுத்துவது இல்லை. இதற்கு எண்ணற்ற உதாரணங்கள் தமிழ்நாட்டில் இன்று சீமான் வரை உண்டு என்பதையும் மூத்த பத்திரிகையாளர்கள் ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+