பெண் கல்வி குறித்து தயாநிதி மாறன் சொன்ன கருத்து.. பாய்ந்து வரும் பாஜக! தேசியளவில் வெடிக்கும் சர்ச்சை
சென்னை: கல்வி தொடர்பாக வட இந்தியப் பெண்கள் மற்றும் தமிழகப் பெண்களை ஒப்பிட்டு தயாநிதி மாறன் சொன்ன கருத்துகள் சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கிடையே திமுக எம்பி தயாநிதி மாறன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. இந்தி பேசும் மாநிலங்களையும், அங்கே வாழும் மக்களையும் இழிவாகப் பேசியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
சென்னையில் குவைத்-இ-மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு விழாவில் திமுக எம்பி தயாநிதி மாறன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வட மாநிலங்களில் பெண்களையும் தமிழ்நாட்டில் உள்ள பெண்களையும் ஒப்பிட்டு சில கருத்துகளைத் தெரிவித்தார். அது சர்ச்சையானது.

தயாநிதி மாறன்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நமது மாணவிகள் பெருமைப்பட வேண்டும்.. உங்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். அதனால்தான் பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். வட மாநிலங்களில் பெண்களிடம் பெரும்பாலும் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும், வீட்டிலேயே வீட்டு வேலைகளைச் செய்யுமாறும் சொல்வார்கள். ஆனால் இங்கு நாம் நம் பெண்கள் படித்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று கூறியிருந்தார்.
மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நாட்டின் தலைசிறந்த முதல்வர் என்றும் தயாநிதி மாறன் புகழ்ந்தார். தமிழ்நாட்டை மிகச் சிறந்த மாநிலம் என்று குறிப்பிட்ட அவர், திராவிட மாடல் ஆட்சி மற்றும் பெரியாரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளின் வழிகாட்டுதல் காரணமாகவே பெண்கள் கல்விக்குத் தமிழ்நாடு தரும் முக்கியத்துவம் தருவதாக குறிப்பிட்டார்.
பாயும் பாஜக
வட இந்தியப் பெண்கள் தொடர்பான தயாநிதி மாறனின் இந்தக் கருத்துகள் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த பாஜக, தயாநிதி மாறன் இந்திய மக்களிடமும், குறிப்பாக வட மாநில மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் வேண்டும் என வலியுறுத்தியது. இது தொடர்பாக பாஜக வட்டாரங்கள், "இந்தி பேசும் மக்களைக் கல்வி அறிவு இலாதவர்கள், நாகரிகமற்றவர்கள் என்று தயாநிதி மாறன் சொல்கிறார்.. இதற்காக அவர் இந்திய மக்களிடமும், இந்தி பேசும் மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று சாடியுள்ளது.
கல்வியறிவு
இந்தச் சூழலில் தான் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அதிகாரப்பூர்வத் தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதன்படி, தமிழ்நாட்டின் பெண் எழுத்தறிவு விகிதம் சுமார் 73.44 சதவீதமாக உள்ளது. இது உத்தரப் பிரதேசம் (57.18%), ராஜஸ்தான் (52.12%), மற்றும் ஹரியானா (65.94%) போன்ற பல வட மாநிலங்களை விட அதிகமாகவே உள்ளது. அதேநேரம் இமாச்சலப் பிரதேசம் அதே காலகட்டத்தில் பெண்களிடையே கல்வி அறிவு என்பது தமிழகத்தை விடச் சற்றே அதிகமாக 75.93% என இருந்தது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி
தயாநிதி மாறன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்த அதே நாளில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குவைத்-இ-மில்லத் கல்லூரியிலேயே மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். "உலகம் உங்கள் கைகளில்" திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு லேப்டாப்களை அவர் விநியோகித்தார். அப்போது பேசிய உதயநிதி, பெரியாரின் கருத்தைச் சுட்டிக்காட்டி, "பெண்கள் வீட்டு வேலைகளில் முடங்கிக் கிடப்பதற்குப் பதிலாகப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார். கல்வி மூலம் பெண்களை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் உதயநிதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications