அடடே.. தமிழக அரசுக்கு நன்றி.. பாஜக தலைவர் அண்ணாமலை போட்ட ட்வீட்
சென்னை: ராஜராஜ சோழனின் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடம் தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் முடிசூட்டிய தினத்தை, ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 1,037வது சதய விழா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை நவம்பர் 3-ம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும், இனிவரும் ஆண்டுகளிலும் ராஜராஜ சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும், தஞ்சையில் உள்ள ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை வரவேற்பு
அண்மைக் காலமாக ராஜராஜ சோழனை வைத்து பல்வேறு அரசியல் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேபோல் தமிழக அரசின் அறிவிப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்று ஒரு கோரிக்கையையும் முன் வைத்துள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு தமிழக பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அகில உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோவில் கண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடம் உடையாளூரில் உள்ளது.

நினைவிடம் அமைக்க கோரிக்கை
பராமரிப்பின்றி சிதலமடைந்த நிலையில் இருக்கும் மாமன்னரின் நினைவிடத்தை தமிழக அரசு புனரமைத்து அவ்விடத்தில் ஒரு மாபெரும் நினைவிடம் அமைத்திட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications