அண்ணாமலை ரிட்டர்ன்ஸ்! 3 மாதங்களுக்கு பிறகு சென்னை திரும்பினார்! வந்ததுமே சரவெடி.. ரியாக்ஷனை பாருங்க
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தமிழகம் திரும்பி உள்ளார். லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பிலான படிப்பை மேற்கொள்ளச் சென்ற அண்ணாமலை, 3 மாத படிப்பு முடிந்து இன்று தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். வந்ததுமே, விஜய் அரசியல் பற்றிய கேள்விக்கு நேரடியாக பதில் கொடுத்துள்ளார் அண்ணாமலை.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சர்வதேச அரசியல் புத்தாக்கப் படிப்பை மேற்கொள்ள கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு முந்தைய நாள் இரவு, முதலீடுகளை ஈர்க்கும் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற நிலையில் அண்ணாமலை அடுத்த நாள் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

லண்டனில் அண்ணாமலை: மேற்படிப்பு மேற்கொள்வதோடு லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டு வந்தார். மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தி வந்தார். அவ்வப்போது, தமிழக அரசியல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வந்தார். இந்நிலையில், 3 மாத படிப்பு முடிந்து இன்று தமிழகம் திரும்புகிறார்.
தமிழகம் திரும்பும் அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். சென்னை திரும்பியுள்ள அண்ணாமலையை வரவேற்று, நேற்று மாலை முதல் 'TNWelcomesAnnamalai' என்ற ஹேஷ்டேக்கை சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இன்று சென்னை விமான நிலையத்திற்கு அண்ணாமலை வந்தபோது பாஜக தொண்டர்கள், “பாரத் மாதா கி ஜே” என கோஷமிட்டனர்.
தமிழக பாஜக: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றதால், இங்கு கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்து வழிநடத்த ஒருங்கிணைப்பு குழு ஒன்றை பாஜக தலைமை அமைத்தது. தமிழக பாஜகவின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வழிநடத்த தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில், மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கனகசபாபதி, பொதுச் செயலாளர்கள் எம்.முருகானந்தம், பேராசிரியர் ராம சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், லண்டன் சென்றுள்ள அண்ணாமலை, அரசியல் படிப்பை முடித்துவிட்டு இன்று தமிழ்நாட்டுக்கு திரும்ப உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்று சென்னை வரும் அண்ணாமலை, சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பார் என்றும், அதன்பிறகு கோவையில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை ரிட்டர்ன்ஸ்: அவற்றைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்க இருக்கிறார். மேலும், 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், மாநிலம் தழுவிய சுற்றுப் பயணத்தையும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்பருகிறது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக,'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழ்நாட்டின் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று நடைபயணம் மேற்கொண்டிருந்தார் அண்ணாமலை.
அதேபோல தற்போது 234 தொகுதிகளிலும், கிராமப் புறங்களை குறிவைத்து பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள கிராமங்களுக்கும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் கட்சி: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, முதல் அரசியல் மாநாட்டை கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு அரசியல் களத்தை அதிர வைத்தது. இந்தச் சூழலில் அண்ணாமலை திரும்பி வந்து இருப்பதால் அரசியல் களம் விறுவிறுப்பாகியுள்ளது.
அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லாத இந்த 3 மாதங்களில் பாஜக சீனிலேயே இல்லாத நிலை இருந்தது. பாஜக உறுப்பினர் சேர்க்கை பணிகள் மந்தமடைந்திருந்தன. சென்னை கனமழையின்போதும் பாஜக பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.
மீண்டும் லைம்லைட்டில் பாஜக: இந்தச் சூழலில் அண்ணாமலை திரும்பி உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் பாஜகவை மீண்டும் ஆக்டிவ் ஆக்குவார் என்று பாஜக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். அண்ணாமலை விஜய்யை எவ்வாறு எதிர்கொள்வார், 2026 சட்டசபை தேர்தலையொட்டி அதிமுகவுடன் உறவை புதுப்பிப்பாரா என்ற பல கேள்விகள் அரசியல் களத்தில் நிலவுகின்றன.
விஜய் அரசியல்: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அண்ணாமலை. அப்போது விஜய் கட்சி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "நடிகர் விஜய் வருகையை மனதார வரவேற்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்கிறோம். விஜய்யின் தீவிர அரசியலுக்கு பிறகு அவரது செயல்பாடுகள் குறித்து பேசலாம்.
நடிகர் விஜய் புதியதாக எந்த சித்தாந்தத்தையும் பேசவில்லை, திராவிட இயக்க சித்தாந்தத்தை தான் பேசுகிறார். விஜய் மிகவும் புகழ்பெற்ற நடிகர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, இந்திய அளவில் ஒரு படத்திற்கு அதிக வசூலை குவிக்கும் நடிகராகவும் விஜய் உள்ளார். அரசியல் என்பது 365 நாட்களும் உழைக்க வேண்டியது என்பது விஜய்க்கு புரிய வேண்டும். விமர்சிக்க வேண்டிய இடத்தில் நடிகர் விஜயை விமர்சிக்க பாஜக தயங்காது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications