தனிப்பெரும் கட்சி பாஜக தான்! நாடாளுமன்ற தேர்தலில் இதுதான் நடக்கும்.. சசிதரூரால் திரும்பும் காங்கிரஸ்
திருவனந்தபுரம்: வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி காங்கிரஸ் கட்சியின் எம்பி சசிதரூர் கணித்து கூறியுள்ளார். அவர் கூறிய கருத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என முனைப்பில் காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணின் ஆலோசனை கூட்டங்கள் 4 முறை நடந்துள்ளது.
நேற்று கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இந்த வேளையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‛இந்தியா' கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் நேற்றைய கூட்டத்தில் மாநிலம் வாரியாக ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. சுமூகமாக வகையில் தொகுதி பங்கீடு செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூர் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து கணித்து கூறியுள்ளார்.
கேரளா மாநிலம் கோழிக்கோடு கேரள இலக்கிய விழா நடந்தது. இதில் சசிதரூர் கலந்து கொண்டு பேசியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக தான் உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதனால் ஆட்சியமைக்க தேவையான இடங்கள் இருக்காது. பிற கட்சிகள் பாஜகவுடன் இணையாமல் இருந்தால் அவர்களுக்கான ஆதரவை குறைக்க முடியும். மேலும் அவர்கள் எங்களுடன் கூட்டணி வைக்க முன்வர வேண்டும். இதுதொடர்பான முயற்சியையும் நாங்கள் மேற்கொள்வோம்.
மேலும் ‛‛இந்தியா' கூட்டணியை பொறுத்தமட்டில் கேரளாவில் தொகுதி பங்கீடு சிரமமான காரியமாக இருக்கும். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியோர் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படுவது என்பது சாத்தியமற்றதாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் அப்படியான சூழல் இல்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. அங்கு எளிதாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடியும்.
எது எப்படியோ என்னை பொறுத்தமட்டில் ஒவ்வொரு தொகுதி மக்களுக்கும் அங்கு போட்டியிடும் நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் சசிதரூரின் இந்த கருத்து என்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு கவலையை அளிக்கும் வகையில் உள்ளது. அதாவது வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் மேலிடம் உள்ள நிலையில் சசிதரூர் இப்படி பேசியிருப்பது தலைவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications