யாருமே எதிர்பார்க்காத பாஜகவின் அதிரடி-தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி? தேவர் வாக்குகளுக்கு குறி?
சென்னை: தமிழகத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதிமுகவின் வாக்கு வங்கியாக இருந்து தற்போது அதிருப்தியில் இருக்கும் தேவர் சமூகத்தின் வாக்குகளை குறிவைத்தே பாஜக இந்த அதிரடி வேட்டையில் இறங்கி இருப்பதாகவே கூறப்படுகிறது.
அதிமுகவின் பிரதான வாக்கு வங்கிகளில் தலித்துகளுக்கு இணையானது தேவர் ஜாதி ஓட்டுகள். இதனால் தென்மாவட்டங்களில் அதிமுக அசுரபலத்துடன் இருந்து வந்தது. ஆனால் கடந்த சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வன்னிய சமூகத்துக்கு மட்டும் 10.5% உள் இடஒதுக்கீடு அறிவித்தார். இந்த அறிவிப்பு வன்னியர் சமூகத்துக்கு எந்த அளவு உற்சாகத்தை தந்ததோ அதே அளவுக்கு தேவர் சமூகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திவிட்டது.

தேவர் சமூகத்தின் கடும் எதிர்ப்பு
தேவர் சமூகத்தின் எதிர்ப்பு தேர்தல் களத்திலும் வெளிப்பட்டது. தென் மாவட்டங்களில் அதே தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஓபிஎஸ் உள்ளிட்ட பல அதிமுகவினரும் வாக்குகள் சேகரிக்க கூட செல்ல முடியாத அளவுக்கு அந்த சமூகம் கோபத்தை ஊர் ஊராக காட்டியது. இதுதான் முதல் தொடக்கம். இதன் பின்னர் அதிமுகவில் ஓபிஎஸ் ஓரம்கட்டப்பட்டார். இப்போது அதிமுகவில் ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. இது 2-வது கட்டம். ஆக அதிமுகவின் பிரதான வாக்கு வங்கியான தேவர் ஜாதி இப்போது உச்சகட்ட அதிருப்தியில் மட்டுமல்லாது அதிமுகவிடம் இருந்தும் விலகியே நிற்கிறது. அதிமுக மீது அதிருப்தியில் இருந்தாலும் அப்படியே தேவர் வாக்குகள் திமுகவுக்கு மடைமாற்றப்படுமா? திமுகவுக்கு இயல்பாக போகுமா? என்ற கேள்விகளுக்கு இப்போது விடை எதுவும் இல்லை.

ப்ளான் போட்ட பாஜக
இந்த வெற்றிட நிலையைத்தான் இப்போது கப்பென கபளீகரம் செய்ய துடிக்கிறது பாஜக. தமிழகத்தில் ஏற்கனவே தேவேந்திரகுல வேளாளர்களை பல்வேறு வாக்குறுதிகளின் பெயரால் தன் வயப்படுத்தி வைத்திருக்கிறது பாஜக. இதில் மிக முக்கிய பங்களிப்பு செய்தவர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. இது தென் தமிழகத்தில் பாஜகவுக்கு நம்பிக்கையை தந்திருந்தது. தற்போது தென் தமிழகத்தின் மற்றொரு பிரதான சமூகமான தேவர் வாக்குகளுக்கும் பாஜக குறி வைத்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க கூடும் என்கின்றன செய்திகள்.

மோடி ட்வீட்
கடந்த ஆண்டு பசும்பொன் தேவர் ஜெயந்தியின் போது ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, தேவர் ஜெயந்தி நன்னாளில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தலைசிறந்த பங்களிப்புகளை நான் நினைவு கூர்கிறேன். துணிச்சல் மிக்க மற்றும் கனிவான குணம் கொண்ட அவர், பொது நலனுக்காகவும் மற்றும் சமூக நீதிக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்தவர். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டவர் அவர் என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி சகோதரர் வருகை
அண்மையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் கிராமத்தில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் மருத்துவர் ராம்குமார்- தமிழ்வாணி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணமான புதுமண தம்பதியினரை பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் தாமோதர தாஸ் பங்கஜ மோடி, இளஞ்செம்பூர் கிராமத்துக்கு நேரில் சென்று வாழ்த்தி ஆசீர்வதித்தார். புதுமண தம்பதியினர் பங்கஜ மோடி காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர். பின்னர் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு அவர் சென்றார். அங்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையின் பாதங்களை தொட்டு மோடியின் சகோதரர் வணங்கினார். இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடியும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு வருகை தரக் கூடும் என செய்திகள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.

மடைமாறும் தேவர் வாக்குகள்
பிரதமர் மோடி, பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவுக்கு வருகை தருவதன் மூலம் ஓபிஎஸ், தினகரன் பக்கம் நிற்கும் அதிமுகவின் தேவர் வாக்குகள் மிக எளிதாக பாஜக பக்கம் செல்லவே சாத்தியங்கள் இருக்கின்றன. ஓபிஎஸ், தினகரன் இருவரும் பாஜகவை ஒருபோதும் முழு மூச்சாக எதிர்க்கக் கூடியவர்கள் இல்லை. இருவருமே பாஜகவின் தயவை நாடி நிற்பவர்கள். இதனால் தேவர் வாக்குகள் பாஜக செல்லவே வாய்ப்புகள் அதிகம். இது இயல்பாகவே ஆளும் திமுகவுக்கு கடும் நெருக்கடியைத் தரும் என்றே கருதப்படுகிறது. பாஜகவின் ஆட்டங்கள்தான் எத்தனை வகையோ












Click it and Unblock the Notifications