நாடகமாடிய செந்தில் பாலாஜி.. அமைச்சர் பதவியில் இருந்து உடனே நீக்கணும்! ஆவேசமான அண்ணாமலை
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான ஜாமீனை ரத்து செய்வது குறித்த வழக்கில் 10 நாட்களில் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை என்பதால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் இப்போது மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர் இதற்கு முன்பு அதிமுக ஆட்சியிலும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடம் பண மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.

செந்தில் பாலாஜி
இந்த வழக்கில் தான் செந்தில் பாலாஜி கடந்த 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். சுமார் ஓராண்டுக்கு மேல் அவர் சிறையிலேயே இருந்தார். கைது செய்யப்பட்டபோது முதலில் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சில காலத்திற்கு பிறகே ராஜினாமா செய்தார். அதன் பிறகும் பல மாதங்கள் கழித்தே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 10 நாட்களில் பதிலளிக்குமாறு செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியையும் திமுகவையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை என்பதால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலை
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமார் மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த சாராய அமைச்சர், சிறையில் ஜாமீன் கிடைப்பதற்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடி, ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்றதை, மாண்புமிகு உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, அதற்கு விளக்கம் கொடுக்குமாறும் சாராய அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும், சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே சாராய அமைச்சர் மீது கூறிய குற்றச்சாட்டுக்களை வசதியாக மறந்து, வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அமைச்சரவையில் இருந்து நீக்கணும்
ஜாமீன் கிடைப்பதற்காகப் பொய் சொல்லி, உச்ச நீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர், அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பின்னணி
முன்னதாக இது தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி 10 நாட்களில் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒரு அமர்வை அமைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றும் விசாரணைக்கு அமைக்கப்பட்ட அமர்வைச் செந்தில் பாலாஜி தரப்பு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
மேலும், செந்தில் பாலாஜி தரப்பு பதில் மனுவைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் நோட்டீஸ் வரவில்லை என்று சொல்வது அதிர்ச்சி அளிப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 3 முறை விசாரணைக்கு வந்த பிறகும் நோட்டீசை காரணமாகக் காட்டி பதில் மனு தாக்கல் செய்யாமல் இருப்பதா எனக் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் 10 நாட்களில் இந்த விவகாரத்தில் பதிலளிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும், கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
