சல்லி சல்லியாக உடையுது பாஜக பிளான்.. சஸ்பென்ஸை உடைக்க வருகிறார் ராகுல் காந்தி... 3 நாள் சீக்ரெட்
சென்னை: தமிழக தேர்தல் களத்தில் நிலவும் "குழப்பமான அமைதிக்கு" முற்றுப்புள்ளி வைக்க, ஏப்ரல் 18 அன்று அதிரடியாக களம் இறங்குகிறார் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி... திமுகவுடனான உரசல் மற்றும் டெல்லி நெருக்கடிகளுக்கு இடையே, தமிழகத்தில் ராகுலின் இந்த "சஸ்பென்ஸ்" வருகை அரசியல் திசையை மாற்றப் போகிறதா? அண்ணாமலையின் விமர்சனங்களுக்குப் பதிலடியாகவும், கூட்டணியின் பலத்தை நிரூபிக்கவும் அமையும் ராகுலின் இந்த பயணத்தின் பின்னணி குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பிரசாரம் நிறைவடைய இன்னும் ஒரு வார காலமே எஞ்சியுள்ளது.

அனைத்துக் கட்சிகளும் தங்கள் இறுதிக்கட்ட வியூகங்களை வகுத்து வரும் வேளையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்கள் இதுவரை தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
திமுக - காங்கிரஸ்
கடந்த தேர்தலை விட இந்த முறை 3 தொகுதிகள் கூடுதலாகப் பெற்று, 28 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீட்டின்போது திமுகவிடம் கடும் போராட்டத்திற்குப் பிறகே இந்த இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.
இத்தகைய சூழலில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அல்லது தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போன்ற முன்னணித் தலைவர்கள் ஒருமுறை கூட தமிழகத்திற்கு வராதது திமுக தலைமைக்கும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தி மவுனம்
இதற்கு நாடாளுமன்றத்தில் நிலவும் அரசியல் சூழலும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் லோக்சபா தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட முன்வடிவு விவாதங்களில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏப்ரல் 18-ஆம் தேதி வரை இந்த முக்கிய விவாதங்கள் நடைபெறுவதால், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியால் டெல்லியை விட்டு வர இயலாத சூழல் நிலவியது.
ராகுல் காந்தியின் இந்தத் தாமதத்திற்குப் பின்னால் வெறும் நேரமின்மை மட்டும் காரணமல்ல, சில அரசியல் கசப்புகளும் இருப்பதாக சலசலப்புகள் வந்தவண்ணம் உள்ளது..
தமிழக காங்கிரஸில் நிசப்தம்
தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல்கள் ஒருபுறமிருக்க, தொகுதிப் பங்கீட்டின்போது திமுக காங்கிரஸ் கட்சியை நடத்திய விதம் முதல்வர் ஸ்டாலின் மீது ராகுல் காந்திக்கு சிறு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. குறிப்பாகப் புதுச்சேரி பிரசாரத்தின்போது கூட இருவரும் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்ளாதது இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்தியது.
அதேசமயம், காங்கிரஸ் அதிக இடங்களை வெல்ல தவறினால், அது வரும் காலங்களில் அக்கட்சியின் பேரம் பேசும் சக்தியைப் பாதிக்கும் என்பதோடு, அதிமுக - பாஜக கூட்டணிக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
பாஜக அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்தப் பிளவை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். "திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது விருப்பமில்லாத, ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. தோல்வி பயம் காரணமாகவே ராகுல் காந்தி தமிழகத்திற்கு வரவில்லை" என்று நேற்றைய தினம் அவர் விமர்சித்தது விவாதத்தை இன்னும் சூடாக்கி விட்டது.
இத்தகைய இக்கட்டான சூழலில், ராகுல் காந்தி நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 18 தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரச்சாரம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ராகுல் காந்தியின் இந்த அதிரடி வருகை திமுக - காங்கிரஸ் கூட்டணித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் "ராகுல் தமிழகத்தைப் புறக்கணிக்கிறார்" என்ற விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த வருகை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் ராகுலின் இந்த இறுதிக்கட்டப் பிரசாரம் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications