நெஞ்சிலே கடப்பாரையால் குத்திய தம்பி: சிலை வைப்பதை மறுத்த கருணாநிதி : சிலை சர்ச்சை ஒரு பார்வை
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணாசாலையில் மீண்டும் சிலை வைக்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தனது சிலையை கடப்பாரையால் இடித்து உடைத்தபோது வேதனையை மறைத்து நெஞ்சிலே குத்தினான் தம்பி என்று கவிதை எழுதிய கருணாநிதி அதன் பின் தனக்கு சிலை வைக்க அனுமதிக்கவில்லை. இதன் பின் உள்ள சுவாரஸ்யமான நிகழ்வை பார்ப்போம்.

அண்ணா சாலையில் சைதாப்பேட்டை சின்னமலை அருகில் ராஜீவ்காந்திக்கு சிலை உள்ளது. நந்தனம் அருகே சேமியர் சாலை சந்திப்பில் தேவருக்கு சிலை உள்ளது. அப்படியே வந்தால் ஜெமினி பாலத்தின் அருகே பெரியார் நின்றபடி இருக்கும் சிலை உள்ளது. அதையும் தாண்டி வந்தால் ஸ்பென்சர் சிக்னலில் ஜெயலலிதா திறந்து வைத்த எம்ஜிஆர் சிலை உள்ளது.

அதையும் தாண்டி வந்தால் அண்ணா சாலை தர்கா அருகே, முன்னர் இருந்த பிலால் ஹோட்டல், வெலிங்கடன் திரையரங்கம் அருகே கருணாநிதியின் ஆளுயர வெண்கல சிலை இருந்தது. தற்போது இல்லை. (1987 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மரணமடைந்தபோது ஏற்பட்ட கலவரத்தை பயன்படுத்தி சிலர் சிலையை உடைத்து விட்டனர்)

அதையும் தாண்டி போனால் வாலாஜா சாலை சந்திப்பில் ஆளுயர் அண்ணா சிலை உள்ளது. அதையும் தாண்டி போனால் சிம்சன் பேருந்து நிலையம் அருகே அமர்ந்தப்படி இருக்கும் பெரியார் சிலை உள்ளது. அதையும் தாண்டி போனால் ஜிம்கானா கிளப் அருகே காமராஜர் சிலை உள்ளது. அதையும் தாண்டி போனால் தீவுத்திடல் அருகே குதிரையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் மன்றோ சிலை உள்ளது. அத்துடன் அண்ணாசாலையும் முடிகிறது.
சிலைகள் அனைத்தும் வரலாற்றுப் பின்னணி கொண்டவை. தமிழக அரசியல் வரலாற்றில் உயிருடன் இருப்பவருக்கு சிலை வைக்கப்பட்டது 2 பேருக்கு மட்டுமே ஒருவர் காமராஜர் இன்னொருவர் கருணாநிதி. காமராஜருக்கு 1962 ஆம் ஆண்டு சிலை வைக்கப்பட்டது. பிரதமர் நேரு நேரில் வந்து சிலையை திறந்து வைத்தார்.
1968-ம் ஆண்டு சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை அண்ணா நடத்தினார். அப்போது மவுண்ட் ரோட்டில் அண்ணாவுக்கு சிலை வைக்கவேண்டும் என எம்ஜிஆர் அண்ணாவிடம் கேட்டதற்கு அண்ணா மறுத்துள்ளார். பின்னர் பேசி பேசியே அவரிடம் அனுமதியும் வாங்கினார் எம்ஜிஆர். ஆனால் சிலை திறக்கப்பட்டபோது அண்ணா உயிருடன் இல்லை.
இதேப்போன்றதொரு கோரிக்கையை கருணாநிதி உயிருடன் இருந்தபோது பெரியாரே வைத்தார். அதை நாசுக்காக கருணாநிதி மறுத்து முதலில் உங்களுக்கு சிலை வைக்க அனுமதி தாருங்கள் என எதிர்க்கோரிக்கையாக வைத்ததாக சொல்வார்கள்.
கருணாநிதிக்கு முதன் முதலில் சிலை வைக்கவேண்டும் என்று அறிக்கை விட்டவர் பெரியார். அண்ணா உயிருடன் முதல்வராக இருக்கும்போதே 1968-ம் ஆண்டே பெரியார் இந்த வேண்டுகோளை வைத்தார். அதற்கு முன் உயிருடன் இருந்தவர்களில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு மட்டுமே ஜிம்கானா கிளப் அருகே சிலை திறக்கப்பட்டிருந்தது. அதனால் இந்த கோரிக்கையை யாரும் ஆட்சேபிக்கவில்லை.

அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்ற கருணாநிதி, அப்போதைய அரசியல் சூழலில் எம்ஜிஆர் நட்பு, காங்கிரஸ் இரண்டாக பிரிந்த நிலையில் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி என்கிற செல்வாக்கு காரணமாக ஓராண்டுக்கு முன்னரே 1971-ம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தார்.தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றது.
பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார் ஏற்கெனவே தான் வைத்த கோரிக்கையை மீண்டும் அப்போதைய முதல்வர் கருணாநிதியை அருகில் வைத்துக்கொண்டே வைத்தார். செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தம் விருப்பத்தை பெரியார் அப்போது தெரிவித்தார்.
அதை மேடையில் இருந்த குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் ஆமோதித்தனர். அதே மேடையில் சிலை அமைக்கும் குழுவுக்கு புரவலராக தன்னையும், தலைவராக குன்றக்குடி அடிகளார், துணைத் தலைவர்களாக நெ.து.சுந்தரவடிவேலு, மேயர் சா.கணேசன், ஏ.என்.சட்டநாதன், தி.க.செயலாளர் கி.வீரமணி உள்ளிட்டோர் அடங்கிய கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அறிவித்தார். அப்போது கூட்டத்தில் பேசிய கருணாநிதி திமுக சார்பில் பெரியாருக்கு ஒரு சிலை திறக்கிறோம், அதன் பின்னர் எனக்கு சிலை திறக்கலாம் என்று அதைத் தட்டிக்கழித்தார்.
அதன் பின்னர் 1973-ம் ஆண்டு பெரியார் மறைந்தப்பின் திமுக சார்பில், சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
சிலை திறப்பு விழாவில் பேசிய அப்போதைய தி.க.தலைவர் மணியம்மை, சொன்னபடி பெரியாருக்கு சிலை வைத்துவிட்டீர்கள். பெரியாருக்கு சிலை திறந்த பின்னர் எனக்கு சிலை வைக்கலாம் என்று பேசிய நீங்கள் இனியும் சாக்குப்போக்கு சொல்ல முடியாது தி.க.சார்பில் உங்களுக்குச் சிலை அமைக்க அனுமதி தரவேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார்.

திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைக்க உள்ளோம், இதற்கு மறுப்பு கூறக்கூடாது என்று வேண்டுகோளை வைத்தார். சிலை அமைக்க கருணாநிதி ஒப்புகொண்டார். சிலை அமைக்கும் இடமும் தேர்வு செய்யப்பட்டு வேலைகள் வேகமாக நடந்தது. 1972 அக்டோபரில் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவை தொடங்கியிருந்தார் எம்ஜிஆர்.
கருணாநிதிக்கு அண்ணா சாலையில் சிலைத் திறப்பதை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை திராவிடர் கழகம் வென்று அண்ணாசாலை தர்கா, வெலிங்க்டன் தியேட்டர் அருகே 1975-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கருணாநிதியின் ஆளுயர வெண்கலச்சிலை திறக்கப்பட்டது.
குன்றக்குடி அடிகளார் சிலையைத் திறந்து வைத்தார். இளமையான தோற்றத்துடன் மேடையில் பேசுவதுபோன்று இடது கையில் துண்டைச் சுற்றியப்படி, வலது கையை உயர்த்தி மூன்று விரல்களை விரித்த நிலையில் அமைக்கப்பட்ட தத்ரூபமான சிலை அது. அதன் பின்னர் 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்ஜிஆர் மறைந்தபோது ஏற்பட்ட கலவரத்தில் கருணாநிதியின் சிலையை சிலர் கடப்பாரையால் இடித்துத் தள்ளினர்.
சிலையை உடைத்ததைக் கண்டு மற்றவர்கள் கொந்தளித்தப்போதும் தனது வழக்கமான நகைச்சுவை கருணாநிதி, சிலையை பீடத்தின் மீதேறி கடப்பாறையால் ஒருவர் உடைக்கும் அந்தப்படத்தை முரசொலியில் வெளியிட்டு "உடன் பிறப்பே, செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை- நெஞ்சிலே தான் குத்துகிறான், அதனால் நிம்மதி எனக்கு. வாழ்க! வாழ்க!'' என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பின்னர் மீண்டு அதே இடத்தில் திராவிடர் கழகம் சார்பில் கருணாநிதிக்கு சிலை அமைக்க முயற்சி எடுத்தபோது மனதை பாதித்த அந்த நிகழ்வால் கருணாநிதி வேண்டாம் என்று அதைத் தடுத்துவிட்டார். எவ்வளவோ வேண்டுகோள் விடுத்தும் கருணாநிதி இசைவு தராததால் மீண்டும் சிலை அமைக்கும் முயற்சியை தி.க.வினர் கைவிட்டனர்.
கருணாநிதி மறைந்தவுடன் கருணாநிதிக்கு மீண்டும் அதே இடத்தில் சிலை அமைக்கப்படும் என்று தி.க.தலைவர் வீரமணி சமீபத்தில் அறிவித்திருந்தார். மீண்டும் அதே இடத்தில் சிலை கம்பீரமாக எழுந்து நிற்கும் என அறிவித்திருந்தார். ஆனால் அண்ணா சாலையில் மெட்ரோ பணிகள், அதிமுக ஆட்சி போன்ற காரணங்களால் அது நடக்காமல் இருந்தது.
கருணாநிதி மறைவுக்குப்பின் அவரது சிலையை திறக்கும் முயற்சியில் அவரது மகன், திமுக தலைவர் ஸ்டாலின் அதிக ஆர்வம் காட்டினார். அண்ணாவை நேசித்த, நாள் தவறினாலும் தான் தவறாமல் வந்த கருணாநிதி மிகவும் நேசித்த அண்ணா அறிவாலயத்தில் அண்ணாவின் அருகில் தம்பி கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சோனியா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது.

ஆனாலும் அண்ணா சாலையில் திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகள் இருந்தாலும் கருணாநிதியின் சிலை இருந்தால் சரியாக இருக்கும் என்கிற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் நேற்று சட்டசபையில் உறுப்பினர் ஒருவர் கோரிக்கை வைக்க அதையொட்டி முதல்வர் ஸ்டாலின் அண்ணாசாலையில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்று அறிவித்தார்.
அண்ணா சாலையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு சிலைகள் இருப்பதை போன்று கருணாநிதி சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டுமென கி.வீரமணி மீண்டும் தன்னிடம் வலியுறுத்தியதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, அண்ணாசாலையில் கருணாநிதி சிலை நிச்சயம் அமைக்கப்படும் என கூறினார்.
மீண்டும் அதே இடத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படலாம். தனக்கு ஏற்பட்ட மன துயரில் தான் இருக்கும் வரை சிலை அமைக்கப்படுவதை மறுத்து வந்தார் கருணாநிதி. இம்முறை சிலை அமைக்கப்பட்டால் திமுக தொண்டர்களுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியைத்தரும் என்பது மட்டும் நிச்சயம்.












Click it and Unblock the Notifications