BUDGET: டிஜிட்டல் கரன்சி முதல் ஒரே பத்திரபதிவு வரை.. நிதி அமைச்சர் நிர்மலாவின் டாப் 15 அறிவிப்புகள்
சென்னை: க்ரிப்டோகரன்சிக்கு வரி விதிப்பு, டிஜிட்டல் கரன்சி, இ பாஸ்போர்ட் அறிமுகம், நாடு முழுக்க ஒரே மாதிரியான பத்திரப்பதிவு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்த பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்தது.
Recommended Video
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2022ஐ இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 90 நிமிடங்களில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுதான் மிக குறைந்த நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் ஆகும். பொதுவாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீண்ட பட்ஜெட் உரையை செய்யகூடியவர். ஆனால் இன்று மிக குறைந்த நேரத்தில் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.
2019ல் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 15 நிமிடம் பட்ஜெட் தாக்கல் செய்தார். 2020ல் பட்ஜெட்டை 2 மணி நேரம் 42 நிமிடம் தாக்கல் செய்தார். 2021ல் பட்ஜெட்டை 1 மணி நேரம் 51 நிமிடம் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் 2022ன் முக்கிய சில சிறப்பம்சங்கள் பின்வருமாறு

இ-பாஸ்போர்ட்
1. கங்கை- கோதாவரி, பெண்ணாறு-காவிரி உள்ளிட்ட 5 நதி இணைப்பு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி கிடைத்தவுடன் நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். இதனால் வேளாண் துறை முன்னேற்றம் அடையும். விவசாயிகள் பலன் அடைவார்கள்.
2.நடப்பு நிதி ஆண்டில் இ-பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். நடப்பு நிதி ஆண்டிலேயே இந்த இ-பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இ பாஸ்போர்ட் என்பதை பயோ மெட்ரிக் பார்ஸ்போர்ட் என்றும் அழைப்பார்கள். இது பார்க்க ஏடிஎம் கார்ட் போல சிப் கொண்டு இருக்கும்.
3. 5ஜி சேவை வழங்க அலைக்கற்றைகள் நடப்பாண்டில் ஏலம் விடப்படும். 5 ஜி சேவை இந்த வருடம் வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இதற்கான ஏலம் விரைவில் நடக்க உள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

டிஜிட்டல் கரன்சி
4. நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே பதிவு என்கிற பத்திர பதிவுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒரே நாடு- ஒரே பதிவு என்கிற பத்திர பதிவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
5. ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகம். டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும். இந்திய பொருளாதாரத்தை டிஜிட்டல் கரன்சி புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் கரன்சி கொண்டு வரப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
6. வருமான வரி கணக்கில் திருத்தம் செய்ய அனுமதி வழங்கப்படும். 2 ஆண்டுகளுக்குள் திருத்தப்பட்ட வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யலாம். ஆனால் மத்திய அரசின் பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி தொடர்பாக எந்த அம்சமும் இடம் பெறவில்லை. நிதியமைச்சர் புதிய அறிவிப்பு வெளியிடாததால் தற்போதைய வரி நடைமுறையே தொடர உள்ளது.

புதிய சாலைகள்
7.வரும் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான நிதிப் பற்றாக்குறை 6.4% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
8. மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் பங்களிப்பு 10%-ல் இருந்து 14% ஆக அதிகரிப்பு
9. 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். வந்தே பாரத் திட்டம் மூலம் 400 புதிய ரயில் சேவைகள் இயக்கப்படும். மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம். சாலை, ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்துகள் ஒருங்கிணைக்கப்படும்.

பிட்காயின்
10. பெரு நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12%-ல் இருந்து 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பல காலமாக இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
11. பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி மூலமான வருவாய்க்கு 30% வரி விதிப்பு. க்ரிப்டோவை விற்பனை செய்யும் சமயங்களிலும், அதன் மதிப்பு உயரும் போதும் லாபத்தில் 30 சதவிகிதம் வரி கட்ட வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
12. இந்தியாவில் உள்கட்டுமான திட்டங்களுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் மத்திய அரசின் மூலதன செலவீடு 34 சதவீதம் அதிகரித்து 7.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.

எல்ஐசி பங்குகள் விற்பனை
13. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுனங்களுக்கான அவசர கால நிதி உதவி திட்டமான ECLGS மார்ச் 2023 வகையில் நீட்டிக்கப்படும், இது கொரோனா, ஒமிக்ரான் தொற்றால் வர்த்தக பாதிப்பை எதிர்கொண்ட நிறுவனங்களுக்கு பெரிய அளவில் உதவும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.
14. 5 மாநில தேர்தல் எதிரொலியாக உணவு பொருள் கொள்முதலுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக (MSP) 2.37 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது விவசாயிகள் இடையே வரவேற்பது பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
15. ஏற்கனவே ஏர் இந்தியா விற்பனை செய்யப்பட்ட நிலையில், எல்.ஐ.சி பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications