தோளோடு தோள் உரசி நின்ற புஸ்ஸி ஆனந்த்! "காலம் தந்த அடி"! மனித வாடையே விஜய்க்கு ஆகாது: கரு. பழனியப்பன்
சென்னை: இந்தியாவிலேயே SIR விவகாரத்தில் நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்து சட்டப்படி எதிர்கொண்டிருக்கும் ஒரே கட்சி திமுக மட்டும்தான். ஆனால், போராடுவதற்கு கூட விரும்பாத விஜய், எதற்குமே முன் வரவில்லை. ஆனால் பொறுப்பில் இருந்தாலும்சரி, இல்லாவிட்டாலும் சரி, திமுக செயல்பட்டுக் கொண்டே இருக்கும்" என்று கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
திமுகவின் 75து ஆண்டு நிறைவை முன்னிட்டு, "திமுக 75 அறிவுத் திருவிழா" என்ற நிகழ்ச்சி கடந்த நவம்பர் 8ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

இந்த விழாவின் ஒரு அங்கமாக திமுக இளைஞரணி முன்னெடுப்பில் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. 5ம் நாளான நேற்றைய தினம், கோவன் கலைக்குழு சார்பில் 'திராவிட சிந்தனைமிக்க சமூகத்தில் வேரூன்றி உள்ள பிற்போக்கு கருத்துக்களை முறியடிப்பது' என்ற தலைப்பில் கூத்து நடைபெற்றது.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு
இதைத் தொடர்ந்து "வரலாற்றைப் படிப்போம், வரலாற்றைப் படைப்போம்" என்ற தலைப்பில் பிரபல டைரக்டர் கரு.பழனியப்பன் சிறப்புரையாற்றினார்... இந்த நிகழ்வில், திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு, சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், தென்மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கரு.பழனியப்பன், "காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' புத்தகத்தை எல்லாரும் 2 வாங்குங்க.. ஒன்று நாம் படிப்பதற்கு. இன்னொன்று நம்மை ஒருவர் திட்டிக்கொண்டே இருக்கிறாரே? அவரிடம் போய் கொடுங்கள், படிப்பதற்கு.. நாம் யாரென்று காட்டுவதற்கு அவரிடம் இந்த புத்தகத்தை கொண்டுபோய் கொடுங்கள்.
ஒவ்வொரு கட்டுரையும் 20, 30 பக்கங்கள் உள்ளன. அதிலும் எழுத்தாளர் திருநாவுக்கரசு ஐயா எழுதியிருக்கும் கட்டுரை 30 பக்கத்தில் உள்ளது.. அதை படித்தாலே போதும்.. 75 வருட திராவிட வரலாற்றை சுருக்கி செதுக்கி தந்திருக்கிறார். பவளக்கார தெருவிலிருந்து பவள விழா வரை ஒரு சம்பவத்தையும் விடாமல் எழுதியிருக்கிறார்.
விஜய்க்கு புத்தகம் கொடுங்க
இங்கு விஜய் வீட்டுக்கு அருகே இருப்பவர்கள் யாராவது வந்திருக்கிறீர்கள் என்றால் 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' புத்தகத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டுபோய், அவரிடம் கொடுங்கள். அவர் படிக்கட்டும்.
விஜய் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 'ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம்' போன்ற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி இருந்தார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நசுங்காத நாகரீகம் என்றெல்லாம் எழுதி தரப்பட்டுளள்து..
மிகப்பெரிய இலக்கியவாதி தான் அவருக்கு இதை எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். எனக்கு எழுத்தாளர் ஜெயமோகன் மீது தான் சந்தேகம் உள்ளது. ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம்' என்ற இந்த வார்த்தைகளுக்கு விஜய் அர்த்தம் சொல்ல வேண்டும்.
8 அடி இடைவெளி
ஒரு மாநாடு என்பது எப்படி இருக்கும் என்பது இந்த புத்தகத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது..
ஒரு மாநாடு என்றால், மாலை நாலே முக்காலுக்கு துவங்கி, துண்டையெல்லாம் தூக்கி வீசி எறிந்துவிட்டு, 15 நிமிடம் மட்டுமே பேசிவிட்டு அஞ்சேகால் மணிக்கு முடிப்பதற்கு பெயர் மாநாடு கிடையாது. தவெக மாநாடுகளில் நீங்கள் பார்த்தால், நிர்வாகிகளுக்கும், விஜய்க்கும் நடுவே 8 அடி இடைவெளி இருக்கும்.
மனித வாடையே ஆகாது
ஏனெனில் மனித வாடையே விஜய்க்கு ஆகாது. விஜய் உள்ளே வந்தாலே எல்லாரும் எழுந்து நின்றுவிடுவார்கள்.. விஜய் 15 நிமிஷம் பேசினால், அந்த 15 நிமிஷமும் நின்றுகொண்டேயிருப்பார்கள்.. அதுக்கப்புறம் விஜய் கிளம்பிடுவார், எல்லாரும் கலைந்து சென்றுவிடுவார்கள்.. விஜய்க்கு மனுஷ வாடையே ஆகாது.. விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளில் எந்த இடத்திலேயேயும் விஜய் பக்கத்தில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.
பிறகு கரூர் துர்சம்பவம் நடந்து 40 நாள் வீட்டிற்குள் இருந்தார்.. அதற்கு பிறகு செயற்குழுக் கூட்டத்தில், விஜய் பக்கத்தில் தோளை உரசி கொண்டு ஆதவ் அர்ஜூனா, இடது பக்கத்தில் தோளை உரசிக்கொண்டு புஸ்ஸி ஆனந்தும் உட்கார்ந்திருக்கிறார்கள்.. காலம் இப்போதுதான் உளிகொண்டு முதல் அடியை டங்கென்று அடித்துள்ளது.
சார் - திமுக செயல்பாடு
இப்படி ஒவ்வொருவராக வெளியே வரத்தான் திமுக எந்த அளவுக்கு உழைக்கின்ற கட்சி என்பதை இந்த மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
இந்தியாவிலேயே SIR விவகாரத்தில் நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்து சட்டப்படி எதிர்கொண்டிருக்கும் ஒரே கட்சி திமுக மட்டும்தான். ஆனால், போராடுவதற்கு கூட விரும்பாத விஜய், எதற்குமே முன் வரவில்லை. ஆனால் பொறுப்பில் இருந்தாலும்சரி, இல்லாவிட்டாலும் சரி, திமுக செயல்பட்டுக் கொண்டே இருக்கும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications