கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவிலும் முழுமையாக இயங்காமல், தவெக பக்கமும் செல்ல முடியாத சூழலில் இருந்த சி.விஜயபாஸ்கர் தற்போது திமுகவில் இணைவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவரது வருகைக்கு திமுக மேலிடம் ஓகே சொல்லியுள்ள நிலையில், அவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படுமென தகவல்கள் உலாவுகின்றன.
விஜய் தலைமையிலான அரசு அமைந்தபோது, அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதில் 21 பேரின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி தப்பியதற்கு எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

அந்த 21 பேரில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் இடம்பெற்றிருந்தனர். எனினும், இந்த இருவரும் மட்டும் இதுவரை எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சி விஜயபாஸ்கர்
குறிப்பாக விஜயபாஸ்கர், தேர்தலுக்கு முன்பே அதிமுக தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் வெற்றிக்காக பெரிய அளவில் நிதி மற்றும் வாக்குறுதிகள் பெறப்பட்டதாகவும், ஆனால் இறுதியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் அவருக்கு இருந்ததாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தேர்தலுக்குப் பிறகு தனது தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளிலும், ஆதரவாளர்களுடன் நடந்த ஆலோசனைகளிலும், மக்கள் விருப்பமே தனது அடுத்தகட்ட முடிவை தீர்மானிக்கும் என்று விஜயபாஸ்கர் தொடர்ந்து கூறி வந்தார்.
தவெக
அதேநேரத்தில், அதிமுகவில் தனது எதிர்காலம் குறித்து அவர் தீவிரமாக சிந்தித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, தவெகவில் இணைய முடியுமா என்ற வாய்ப்பையும் அவர் ஆராய்ந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகிய சில எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்த நிலையில், அதே பாதையை விஜயபாஸ்கரும் பரிசீலித்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அவரது பெயருக்கு எதிராக சில தவெக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
திமுக
குறிப்பாக வழக்குகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கியிருந்த முன்னாள் அமைச்சர்களை கட்சியில் சேர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்து தவெக மேலிடத்தில் இருந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜயபாஸ்கரின் தவெகவில் சேரும் முயற்சி எதிர்பார்த்தபடி பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில்தான் திமுக பக்கம் அவர் கவனம் திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 தேர்தல்
கடந்த சில ஆண்டுகளாகவே திமுக தலைமையுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்றதாகவும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அந்த முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்ததாகவும் கூறப்படுகிறது. திமுக தலைமைக்கு நெருக்கமான சில முக்கிய நிர்வாகிகள் மூலமாக விஜயபாஸ்கர் தனது விருப்பத்தை தெரிவித்ததாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
புதுக்கோட்டை
ஆரம்பத்தில் புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் இருந்து எதிர்ப்பு இருந்தாலும், பின்னர் அந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. விஜயபாஸ்கர் திமுகவில் இணைய முடிவு செய்தால், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவாகும். அதன் பின்னரே கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைவார் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், திமுகவில் இணைந்த பிறகு அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்குவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவட்டச் செயலாளர்
விராலிமலை தொகுதி அமைந்துள்ள புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்து, அந்த பொறுப்பை விஜயபாஸ்கருக்கு வழங்கலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. கடந்த தேர்தலில் விராலிமலையில் விஜயபாஸ்கர் பெற்ற வாக்கு வித்தியாசமும், அவரது தனிப்பட்ட செல்வாக்கும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
அதிமுக
இருப்பினும், விஜயபாஸ்கரின் அடுத்தகட்ட முடிவு குறித்து இதுவரை அவரது தரப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் அதிமுகவில் இருந்து விலகும் மனநிலையிலும், தவெகவில் இணையும் வாய்ப்பு குறைந்த நிலையிலும், திமுகவில்தான் அவரது அடுத்த அரசியல் அத்தியாயம் தொடங்கக்கூடும் என்ற பேச்சு புதுக்கோட்டை வட்டாரங்களில் தீவிரமாக கேட்கிறது என்பது மட்டும் உண்மை.












Click it and Unblock the Notifications