மீனு வலையில் சிக்கிருச்சு போல.. 2 பேர் இங்கே வர்றாங்களாமே.. எடப்பாடிக்கு குஷி.. திமுக லேசில் விடாதே
சென்னை: பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, கூட்டணி அமையும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுகவின் வயது 51 ஆகிவிட்டதால், அதில் பெரிய மாற்றம் செய்ய தேவையில்லை..

தூத்துக்குடி மாவட்டத்தில் நான் சென்று ஆய்வு மேற்கொண்டபோது எந்த உதவியும் கிடைக்கவில்லை, எந்த அமைச்சரும் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். திமுக ஆட்சி, பொய்யான தோற்றத்தை உருவாக்குகின்ற ஆட்சியாக உள்ளது.
வெற்றி: வெள்ளம் வந்து மக்களுக்கு இவ்வளவு பெரிய துன்பம் ஏற்பட்டபோதும் கூட, முதல்வர் ஸ்டாலின், இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார். எம்பி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான், எந்தெந்த கட்சியுடன் கூட்டணி என்பது தெரியவரும்... அதிமுக தலைமையில் ஒரு வலிமையான கூட்டணி அமையும்... புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்" என்று உறுதிபட தெரிவித்திருக்கிறார்.
பாஜகவுடனான கூட்டணியை முறித்து இத்தனை மாதமாகியும், இன்றும் அதிமுகவில் கூட்டணி முடிவாகவில்லை.. எந்த கட்சியும் வெளிப்படையான ஆதரவை தரவும் இல்லை. அதிமுகவில் கூட்டணி அமையாததே, பாஜகவுக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக அமைந்து வருகிறது. ஆனாலும், அதிமுகவில் நடந்து முடிந்த பொதுக்குழுவுக்கு பிறகு, கூட்டணி விஷயத்தையும் தாண்டி, சில மாற்றங்கள் நடந்து வருவதாக சொல்கிறார்கள்..
முக்கியஸ்தர்கள்: அதில், முக்கியமானது, திமுகவிலிருந்து முக்கியஸ்தர்களை அதிமுகவுக்கு கொண்டுவருவதுதானாம்.. குறிப்பாக செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு, கொங்குவில் தீவிர கவனத்தை செலுத்த துவங்கியது அதிமுக..
ஈரோடு தேர்தலின்போது கொங்குவில் அதிமுக சறுக்கியிருந்ததற்கு காரணமே செந்தில் பாலாஜிதான் என்று சொல்லுமளவுக்கு அவரது கொங்கு மண்டல செல்வாக்கு இருந்தது.. அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட கொங்குவின் சறுக்கலை எடப்பாடியால் ஜீரணிக்க முடியாத நிலையில்தான், செந்தில் பாலாஜி சிறை சென்றதுமே, அதிருப்தியாளர்களுக்கு வலையை விரிக்க துவங்கியதாம்.
வலை: இந்த வலையில், திமுகவின் 2 முக்கிய நபர்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.. இதற்கெல்லாம் பின்னணியாக அதிமுகவின் "மணி"யான புள்ளி செயல்பட்டதாகவும் சொல்கிறார்கள். இப்படி வலிமை வாய்ந்தவர்களை, அதிமுக பக்கம் கொண்டு வந்துவிட்டால், கொங்குவை எளிதாக வசப்படுத்திவிடலாம் என்பதே அதிமுகவின் கணக்காக உள்ளதாம்.
இதுஒருபக்கமிருந்தாலும், இந்தியா கூட்டணி மீதும் அதிமுகவுக்கு ஒரு கண் இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது, "புயல் பாதிப்புகளில் பெரும்பாலான மாவட்ட மக்களின் அதிருப்திகள், திமுக மீது அதிகமாகிவிட்டது, இதை வைத்தே அரசியல் செய்தால் வெற்றி நமக்குதான்" என்று லிஸ்ட் போட்டு, காங்கிரஸிடம் எடுத்து சொல்லி வருகிறதாம் அதிமுக..
இந்தியா: இதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள்.. காங்கிரசுடன் உறவை வளர்த்து கொள்வதன் மூலம், இந்தியா கூட்டணியிலும் இடம் பிடித்து விட முடியும் என்று அதிமுக கணக்கு போடுவதாக தெரிகிறது.
ஒருவேளை, காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட்டால், இதை வைத்தே சில கட்சிகள் தங்கள் பக்கம் வருவார்கள் என்றும், காங்கிரஸ் அதிமுக பக்கம் வந்துவிட்டால், சிறுபான்மையினர் ஓட்டுக்களும் தானாகவே அதிமுகவுக்கு வந்துவிடும் என்றும் அதிமுக மேலிடம் நம்புகிறதாம். ஆகமொத்தம், அதிமுக களமே பரபரப்பாக காணப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications