மன்னார்குடி குழப்புதே.. இன்னும் அதே நினைப்பில் எடப்பாடி? அப்ப மெகா கூட்டணி யாருடன்? புகையுது அதிமுக
சென்னை: அஇஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டவட்டமாக அறிவித்துவிட்ட போதிலும், தொடர் பரபரப்புகள் கட்சிக்குள் வட்டமடித்து கொண்டேயிருக்கிறது. இது அதிமுக மேலிடத்தை மேலும் கடுப்பாகி வருகிறதாம்.
லோக்சபா தேர்தல் தோல்வி, வாக்கு சதவீதம் குறைந்திருப்பது, வாக்குகள் பிரிவது, திமுகவின் அசுர பலம், பாஜகவின் தேர்தல் வியூகங்கள் போன்றவை குறித்தெல்லாம் அதிமுக நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

முதல்கட்ட ஆலோசனை கூட்டங்கள் தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதியிலும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 2ம் கட்ட ஆலோசனை கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த இரு கட்ட ஆலோசனை கூட்டத்திலும், சசிகலா, தினகரன், ஓபிஎஸ் குறித்த பேச்சுக்கள் எழுந்தபடியே உள்ளதாம்.
நிர்வாகிகள்: தென்மண்டலத்தில் முக்குலத்தோர் ஆதரவு தேவையானால், சசிகலா, தினகரன், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைப்பது அவசியம் என்பதை நிர்வாகிகள் வலியுறுத்தினார்களாம்.
அதேபோல, முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எடப்பாடியை அவரது வீட்டிலேயே சந்தித்து பேசியபோதுகூட, சசிகலாவை கட்சியில் சேர்ப்பதன் மூலம் கட்சி வலுப்பெற வாய்ப்புள்ளதாக சொன்னார்களாம். எனினும் அவர்களை கட்சிக்குள் இணைக்க, எடப்பாடி பழனிசாமி கடைசிவரை திட்டவட்டமாக மறுத்து விட்டாராம்.
அதிருப்தியாளர்கள்: இதனால், அதிருப்திக்குள்ளான டெல்டாவை சேர்ந்த 3 மாஜி அமைச்சர்களும் விரைவில் சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க இருப்பதாகவும், ஒருவேளை அப்படி நடந்தால், எடப்பாடிக்கு எதிராக அதிமுகவில் போர்க்குரல் வெடிக்கும் என்றும் செய்திகள் கசிந்திருந்தன.
இதுபோல பல்வேறு யூகங்கள் கசிந்த நிலையில்தான், அதிமுக மேலிடம் சில நாட்களுக்கு முன்பு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.. அதிமுகவுக்கு எதிராக, இணையதளத்தில் பொய் தகவல் பரப்புவது குறித்து கண்டனம் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த யூகங்கள் இன்னும் நிற்காமல் இப்போதுவரை வரை வட்டமடித்து கொண்டேயிருக்கிறது.
நிர்வாகிகள்: நேற்றுகூட திண்டுக்கல், திருவள்ளூர் வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்துள்ளது. அப்போது எடப்பாடி பேசும்போது,"இழந்த வாக்கு வங்கியை மீட்டெடுக்க வேண்டும். 2026 தேர்தலில் முழு பலத்தை காண்பிக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு நிர்வாகியும், களத்தில் முழு மூச்சுடன் பணியாற்றுவதுடன், கிராமம் கிராமமாக சென்று திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம். அதை கட்சி தலைமை பார்த்துக்கொள்ளும்" என்றாராம்.
எனினும் சில நிர்வாகிகள், எடப்பாடியின் அரசியலை விமர்சித்தவாறே உள்ளார்களாம். "ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்விக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து கட்சி தலைமை இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை. இன்னமும் எடப்பாடி தன்னை ஜெயலலிதா என நினைத்துக்கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
விமர்சனம்: கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க மூத்த தலைவர்கள் ஆர்வம் காட்டினாலும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சிலர் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.. கூட்டணி விஷயத்திலும் தெளிவான முடிவில்லை.. இனியும் கட்சி தன்னை சரிசெய்து கொள்ளவில்லையானால், இனி வரும் எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றிபெற முடியாது" என்கிறார்களாம்.
இதுவரை இல்லாத அளவுக்கு, அதிமுக நிர்வாகிகளை நேரடியாகவே வரவழைத்து எடப்பாடி பழனிசாமி அவர்களின் கருத்துக்களை கேட்டுவருவது, கட்சிக்கு மிகுந்த பலத்தை தந்து கொண்டிருக்கிறது.. அதேபோல, திமுக எதிர்ப்பிலும், எடப்பாடியின் அரசியல், மீண்டும் வேகம் எடுத்துள்ளது.. ஆனால், இந்த மன்னார்குடி விஷயம் மட்டும் இதுவரை பிடிபடாமலேயே உள்ளதாக தொண்டர்கள் சொல்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications