சுக்கு சுக்கா நொறுங்கும் கணக்கு.. "வேலையை" காட்டும் பாஜக.. துரோகிகளும், அடிமைகளும்.. சீறிய பழனிசாமி
அதிமுகவை பாஜக சிதைத்து கொண்டிருப்பதாக கேசி பழனிசாமி விமர்சித்துள்ளார்
சென்னை: அதிமுக மேலும் பலவீனம் அடையும் வகையில் கட்சியில் பிளவுகள் நடப்பதென்பது, பாஜக போன்ற தேசிய கட்சிகள், மதவாத சக்திகள் இங்கு கால் ஊன்றுவதற்கு மட்டும்தான் உதவிகரமாக இருக்கும்.. அதேபோல, திமுக-வை வலிமை பெற செய்யும் வகையில் தான் அது அமையும் என்று முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக விவகாரத்தை பொறுத்தவரை, சுப்ரீம்கோர்ட் தீர்ப்பே இறுதி தீர்ப்பாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. ஆனால், இந்த தீர்ப்பு வருவதற்கு எப்படியும் காலதாமதமாகும் என தெரிகிறது.
எம்பி தேர்தல் வரை, இந்த பிரச்சனை இழுபறியாகவே இழுத்து செல்லக்கூடும் என்றும் எடப்பாடியின் பிடிவாதமே திமுகவுக்கு பிளஸ் ஆகி கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூழல் - ரோல்
நீதிமன்ற தீர்ப்பு தற்சமயம் எடப்பாடிக்கு சாதகமாக வந்துள்ள சூழலில், அதிமுக யார் கையில் போகும்? ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? இதில் திமுகவின் ரோல் என்ன? என்பது குறித்த கேள்விகளும் சந்தேகங்களும் தினம் தினம் அரசியல் களத்தில் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.. இதனிடையே, அதிமுகவின் முன்னாள் எம்பியும், மூத்ததலைவருமான கேசி பழனிசாமி, எடப்பாடி - ஓபிஎஸ் இரு கட்சிகளையுமே கடுமையாக சாடி வருகிறார்.

ரத்தத்தின் ரத்தம்
எம்ஜிஆரும் சரி, அம்மாவும் சரி, உடனிருந்து எதிர்த்தவர்களை வெற்றிகொள்ள வேண்டுமென்று என்றுமே நினைத்ததில்லை.. மாறாக, திமுக-வை விழுத்தி அதிமுக-வை பலப்படுத்த வேண்டும் என நினைத்தார்கள். ஒரு கூட்டணி கட்சிக்கு தகுதியை மீறி 6, 7 சீட் கொடுப்பதற்கு பதிலாக, நம் இயக்கத்தில் பயணித்தவர்களை ஒன்றிணைத்து செயல்பட்டால் அதிமுக வலிமையாக இருக்கும். தொண்டர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வேண்டும்.. அதேபோல சின்னம் முடக்கப்படக்கூடாது, அதிமுக தன்னுடைய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது.

நொறுங்கும் கணக்கு
இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் வகையிலான ஆபத்தான விளையாட்டை இன்று இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று அதிமுக சாதிவாரியாக, மண்டல வாரியாக ஒரு பிளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அது தடுக்கப்பட வேண்டும், தகர்க்கப்பட வேண்டும். எடப்பாடி, அதிமுக வளர வேண்டுமென்று போராடவில்லை. தான் முதலமைச்சராக வரவேண்டும், பொதுச்செயலாளராக வரவேண்டுமென்று தான் போராடுகிறார். அதேபோல் தான் ஓபிஎஸும்" என்று விடாமல் விமர்சித்து வருகிறார்.

பாஜக அடிமைகள்
இந்நிலையில், ஒரு யூடியூப் சேனலுக்கு பழனிசாமி ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்: "அதிமுக வலிமையான கட்சி.. இன்றைக்கும் வலிமை அதிகமாகி கொண்டே போகிறது.. அதை சிதைக்கிற வேலையை பாஜக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.. பாஜக ஒருபக்கமும், இபிஎஸ் ஓபிஎஸ் மறுபக்கமும், டிடிவி சசிகலா இன்னொரு புறமும், சிவி சண்முகம், முனுசாமி இன்னொரு புறமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.. எடப்பாடி & ஓபிஎஸ் இருவருமே பாஜகவுக்கு அடிமைகள். இருவருமே திமுகவுடன் மறைமுகமான தொடர்பில் இருக்கிறார்கள்.

ஜோசியக்காரர்
சின்னம் முடக்கமுடியாது, கட்சி நம்மகிட்டதான் இருக்கும் என்று எடப்பாடி சொல்கிறாரே. அவர்கிட்ட யாராவது ஜோசியக்காரங்க சொல்லியிருப்பாங்க.. அல்லது பாஜககாரர்கள் யாராவது சொல்லியிருப்பாங்கபோல.. பாஜக ஒரு அரசியல் கட்சி.. அவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும் கனவில் இருப்பார்கள்.. இந்த விவகாரங்கள் இப்படியே பெரிய அளவில் விமர்சனத்துக்கு உட்பட்டு, நீதிமன்ற வாசல்களில் எடப்பாடி - ஓபிஎஸ் என்கிற மோதல் நடந்துட்டே இருக்க வேண்டும்..குறைந்தபட்சம் அதிமுக வளர்ச்சி தடுக்கப்பட வேண்டும்..

துரோகிகள்
திமுகவுக்கு மாற்றாக பாஜக என்கிற வலுப்பெற வேண்டும். அதிமுகவுக்கு இருக்கும் வாக்குவங்கியில் ஒரு பகுதி, திமுகவுக்கு எதிரான வாக்கு வங்கி.. அந்த வாக்கு வங்கியை அவர்கள் கைப்பற்ற வேண்டும். இதைநோக்கிதான் பாஜக பயணிக்கிறது.. இது தெரியாமல், ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரு துரோகிகளும் கட்சியை சிதைத்து கொண்டிருக்கிறார்கள்.. இதுதான் அதிமுக தொண்டர்களுக்கு வருத்தம்.

எடப்பாடி டார்கெட்
அதிமுகவுக்கு தலைமைதான் சரியாக அமைய வேண்டும்.. தொண்டர்கள் வலுவாக இருக்கிறார்கள்... அதுவும் மேற்கு மண்டலத்தில் இதுஅதிகமாகவே தென்படுகிறது.. இபிஎஸ் டார்கெட் செய்வதும் மேற்கு மண்டலம்தான். பாஜக டார்கெட் செய்வதும் மேற்கு மண்டலம்தான்.. திமுக டார்கெட் செய்வதும் மேற்கு மண்டலம்தான்.. பாமகவின் மறுஉருவமாக்க, ஒரு சாதிக்கட்சியாக்க எடப்பாடி முயற்சிக்கிறார்.. பார்வர்டு பிளாக்கின் மறு உருவமாக்க, ஒரு சாதிக்கட்சியாக்க அதிமுகவை மாற்ற ஓபிஎஸ் முயற்சிக்கிறார்" என்றார் கேசி பழனிசாமி.












Click it and Unblock the Notifications