2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை
சென்னை: தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் அறிக்கையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளுமே 2000 ரூபாய் தருவதாக அறிவித்துள்ளன. உண்மையில் மகளிர் உரிமை தொகையை ரூ. 2,000 ஆக உயர்த்துவது சாத்தியமா மற்றும் நிதிநிலை அதைத் தாங்குமா என்பதைப் பின்வரும் காரணிகள் மற்றும் புள்ளி விவரங்களை வைத்து பார்ப்போம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதாக கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. அந்த திட்டத்தை சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து 2023ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்படுத்தியது. அரசு அறிவித்த தகுதி உடைய சுமார் 1.15 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பலன் பெறுகிறார்கள். மாதம் ரூ. 1,000 வீதம் வழங்கப்படும் உரிமை தொகை காரணமாக வருடத்திற்கு அரசுக்குச் சுமார் ரூ. 14,000 கோடி செலவாகிறது.அதாவது கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 14000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதை புதிய அரசு தான் முடிவு செய்ய முடியும். தற்போதைய நிலையில் மாதம் ரூ. 2,000 ஆக உயர்த்தினால், இந்தச் செலவு நேரடியாக ரூ. 28,000 கோடி ஆக உயரும்.

கடன் மிக அதிகம்
தமிழக அரசின் மொத்தக் கடன் சுமை சுமார் ரூ. 8 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. 2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில் வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க அரசு பல முயற்சிகளை எடுத்தாலும், வட்டி கட்டுவதற்கே பெரும் தொகை செலவிடப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் மாநிலத்தின் வரி வருவாய் செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை. மத்திய அரசின் ஜிஎஸ்டி பங்கு சரியான நேரத்தில் வராததும், உள்ளூர் வருவாய் ஆதாரங்கள் சரியாக கிடைக்கப்பெறவிலை.. எனவே அரசு ஊழியர்கள் சம்பளம் உள்பட ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி அளவிற்கு தமிழக அரசு கடன் வாங்குகிறது.
2000 நிச்சயம் கொடுக்க முடியும்
தற்போதைய நிலையில் 2000 ரூபாய் மகளிர் உரிமை தொகையை தமிழக அரசால் கொடுக்க முடியுமா என்றால்.. நிச்சயம் கொடுக்க முடியும். ஆனால் அதற்குச் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்படும். தகுதிக்கான அளவுகோல்களை இன்னும் கடுமையாக்கி, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தால் தொகையை உயர்த்த ஒரு வாய்ப்பு உள்ளது. இல்லை தகுதியை அரசு மாற்றவில்லை என்றால், மதுபான விற்பனை மற்றும் பத்திரப் பதிவு மூலம் வரும் வருவாயை கணிசமாக உயர்த்த வேண்டியதிருக்கும்.
மதுவின் விலை கூடும்
கண்டிப்பாக மதுவிற்கு அரசு வரியை அதிகரிக்க 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது. மின்சாரம், சொத்து வரி, குடிநீர் வரி, பேருந்து கட்டணம் உயர்வு என அரசு நிதிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும். அதேபோல் அரசு மாற்று ஏற்பாடாக குவாரிகளை முறைப்படுத்தி ஏலம் விட்டும் பணம் திரட்ட வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதேநேரம் மகளிர் உரிமை தொகைக்காக புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் அல்லது இதர மானியங்களைக் குறைத்துவிட்டு இந்தப் பணத்தைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
அரசால் தாங்கிக் கொள்ள முடியுமா?
நேரடியாகச் சொன்னால், தற்போதைய பொருளாதாரச் சூழலில் கூடுதலாக ரூ. 14,000 கோடியைச் சுமை ஏற்றுவது மிகவும் கஷ்டமானது தான். மக்களிடம் அதிகப் பணம் புழங்கும்போது தற்காலிகமாகப் பொருளாதாரம் சுறுசுறுப்பாகத் தெரிந்தாலும், அது நீண்ட கால அடிப்படையில் நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கும். மத்திய அரசு விதித்துள்ள கடன் வாங்கும் வரம்பை ஏற்கனவே தமிழக அரசு நெருங்கியுள்ளது. எனவே, கூடுதல் கடன்பெற்று இந்தத் திட்டத்தை நடத்துவது நிதி நெருக்கடியை உருவாக்கும். அரசியல் ரீதியாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டாலும், பொருளாதார ரீதியாகப் பார்த்தால், மற்ற வளர்ச்சித் திட்டங்களை பாதிக்காமல் ரூ. 2,000 வழங்குவது தற்போதைய நிதி நிலையில் கடினமான காரியம் ஆகும்.












Click it and Unblock the Notifications