மதுபோதையில் அசுர வேகம்..தடுப்புச்சுவரில் மோதி நொறுங்கிய கார்..ஐடி பெண் ஊழியர் பலி.. சென்னையில் சோகம்
சென்னை: வார விடுமுறை நாளில் லாங் டிரைவ் செல்வதற்காக காரில் மதுபோதையில் மின்னல் வேகத்தில் ஐடி ஊழியர்கள் 4 பேர் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற கார் பள்ளிக்கரணை அருகே விபத்தில் சிக்கியது. இதில் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களின் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த என்ஜினீயர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஐடி ஊழியர்கள் வார விடுமுறை நாட்களில் ஈசிஆர் சாலையில் தங்கள் கார்களில் பறப்பது சென்னையில் வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது.

சென்னையை சுற்றிப்பார்க்க..
அந்த வகையில் விடுமுறை நளான நேற்று துரைப்பாக்கத்தில் பணியாற்றும் பெண் ஐடி ஊழியர் காரில் சுற்றிப்பார்க்க சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:- கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா அருணா. 24 வயதான இவர் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் அமைந்து இருக்கும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறை தினமான நேற்று தனது நண்பர்கள் ஸ்ரீதர், அபிஷா, பங்க்ஜ் ஆகியோருடன் காரில் சென்னையை சுற்றிப்பார்க்க புறப்பட்டு சென்றுள்ளார்.

தடுப்புச்சுவரில் மோதி விபத்து
ஸ்ரீதர் காரை ஓட்ட அவருக்கு அருகில் பங்கஜூம் பின்புற இருக்கையில் கிருத்திகா அருணா மற்றும் அபிஷா ஆகியோர் அமர்ந்து இருந்தனர். துரைப்பாக்கம் - பல்லாவரம் 200 அடி சாலையில் கார் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது, பள்ளிக்கரணை குப்பைக்கிடங்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காரின் கதவுகள் திறந்தன.

காரில் இருந்து வெளியே விழுந்த கிருத்திகா
இதில் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த கிருத்திகா அருணா வெளியே தூக்கி வீசப்பட்டார். பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்த விபத்தை பார்த்ததும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பதறினர். காரில் பயணித்த ஏனைய மூன்று பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். காரில் இருந்து வெளியே விழுந்த கிருத்திகா அருணா படுகாயம் அடைந்தார். விரைந்து வந்த போலீசார், படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விபத்துக்கு என்ன காரணம்
ஆனால் காரில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்டதால் படுகாயம் அடைந்து இருந்த கிருத்திகா அருணா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மீதமுள்ள 3 பேரும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கொரட்டூரை சேர்ந்த ஸ்ரீதர்(29) காரை வேகமாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று சொல்லபப்டுகிறது.

போக்குவரத்து பாதிப்பு
அதிவேகத்தில் காரை இயக்கிய போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவற்றில் மோதி பல்டி அடித்து கார் உருண்டுள்ளது. சினிமா சண்டைக் காட்சிகளில் கார் பறப்பதை போல நடந்த இந்த விபத்து அங்கிருந்தவர்களை பதற வைத்தது. எப்போதும் வாகன போக்குவரத்து அதிகம் இருக்க்கும் துரைப்பாக்கம் - பல்லாவரம் 200 அடி சாலையில் நடைபெற்ற இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிவேகமாக காரை இயக்குவதே இத்தகைய விபத்துக்களுக்கு காரணம் என்று வாகன ஓட்டிகள் சிலர் ஆதங்கத்துடன் கூறியதையும் காண முடிந்தந்து. மேலும் வார இறுதி நாட்களில் அதிவேகத்துடன் வரும் வாகனங்களை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சிலர் கூறினர்.












Click it and Unblock the Notifications