தண்ணீரில் மூழ்கும் என அச்சம்.. வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை வரிசையாக நிறுத்தி உரிமையாளர்கள்!
சென்னை: சென்னை வேளச்சேரியில் மழைநீர் தேங்கி உள்ளதால், ஏராளமான கார் ஓட்டிகள் தங்கள் கார்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க, வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி உள்ளனர்.
சென்னையில் நேற்றிரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கிக் கிடக்கின்றது. குறிப்பாக சென்னை பகுதியானது தாழ்வான பகுதியாக இருப்பதால் லேசான மழை பெய்தாலே வெள்ளக்காடாக மாறி விடுகிறது.
சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகள் குளம் போல் பல இடங்களில் காணப்படுகின்றன. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மாம்பலத்திலிருந்து தியாகராய நகருக்கு செல்லக்கூடிய துரைசாமி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதைகள்
வடசென்னையில் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால் அவ்வழியாகவும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. இதுதவிர சேத்துபட்டு - பூந்தமல்லி சாலையை இணைக்கும் சுரங்கப்பாதையும் மழைநீரால் மூழ்கி உள்ளது. சுரங்கப்பாதைகள் என்றில்லை. பல பாதைகளில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. வெள்ள நீர் வடிவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்கிற நிலை உள்ளது.

மேம்பாலம்
இந்நிலையில் வேளச்சேரியில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் அதிகமாக தேங்கி உள்ளது. இன்னும் மழை நீடிக்கும். மீண்டும் மழை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்தது. இதனால் அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள், வேளச்சேரி பழைய மேம்பாலத்தில் தங்கள் கார்களை வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கார்கள் பழுதடையும் என்ற அச்சம் காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

என்ன காரணம்
ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு பெய்த மழையில் ஏராளமான கார்கள் நீரில் மூழ்கி பழுதடைந்தன. இதில் இருந்து மீண்டு வர வாகன ஓட்டிகளுக்கு பல நாட்கள் ஆனது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கார்கள் பழுதடைந்தன. அதுபோன்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி உள்ளன.

இயல்புநிலை
vஇதனிடையே சென்னையில் மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. மழை கொஞ்சம் குறைந்துள்ளது. விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை குறைந்ததால் சென்னையில் மின்சார ரயில் சேவை இயல்புநிலையை அடைந்துள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் படிப்படியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. படிப்படியாக இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு ஊர் திரும்பும் மக்கள் இரண்டு நாள் கழித்து வருமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications