பொன்முடியின் உதவியாளரானதால் சிக்கல்.. அரசு ஊழியர் மீது பாயும் நடவடிக்கை? உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: அமைச்சர் பொன்முடியுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அரசு ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் காலமான நிலையில் கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த இடைத்தேர்தலின்போது பல்வேறு விஷயங்கள் சர்ச்சையாகின.
அதில் ஒன்று தான் அரசு ஊழியர் பிரசாரம் செய்த விவகாரம். அதாவது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளில், அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இருக்க கூடாது எனவும், தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது, இந்த விதிகளை மீறி அமைச்சர் பொன்முடியுடன் அரசு ஊழியர் பிரசாரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது அமைச்சர் பொன்முடி ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பொன்முடியிடம் உதவியாளராக பணியாற்றி வந்த அரசு ஊழியரான சோமஸ்கந்தன் என்பவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை எதிர்தரப்பினர் முன்வைத்தனர்.
இந்நிலையில் தான் விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சோமஸ்கந்தன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, லோக் ஜனசக்தி கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செல்வபாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பணி சம்பந்தமான இந்த விவகாரம் எப்படி பொது நல வழக்காக கருத முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 27ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications