சென்னையில் துணை நடிகை வீட்டில் ஜியாமெட்ரி பாக்ஸில் இருந்த ரூ 50ஐ கூட விட்டு வைக்காத கொள்ளையர்கள்
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் துணை நடிகையின் வீட்டில் கொள்ளையடிக்கச் சென்று ஏமாந்த கொள்ளையர்கள், குழந்தைகளின் ஜியாமெட்ரி பாக்ஸில் இருந்த 50 ரூபாய் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகையை தேடிய கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் கலைத்து போட்டு விட்டதாக துணை நடிகை தீபா பாஸ்கர் கண்ணீர் மல்க கூறியிருந்தார். மேலும் அவர் வீட்டில் வைத்திருந்த ரூ 6000 ரொக்கத்தை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் தீபா பாஸ்கர் (35). இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் தனது பிறந்த நாளின் போது வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தார்.
அப்போது சாவியை வழக்கம் போல் ஜன்னலில் மறைத்துவைத்துவிட்டு சென்றாராம். இந்த நிலையில் தீபாவின் கணவர் வீட்டிற்கு வந்த போது கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே போய் பார்த்த போது அங்கு பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன.
பீரோவில் உள்ள லாக்கர் மட்டும் உடைக்கப்படவில்லை. உடனே தீபாவுக்கு போன் செய்து அவர் வந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவில் வைத்திருந்த 6000 ரொக்கப் பணம் காணாமல் போயிருந்ததாம். அது போல் கொள்ளையடிக்க வந்தவர்கள் நகைகளை எடுப்பதற்காக வீட்டில் உள்ள பொருட்கள் முழுவதையும் கலைத்து போட்டு தேடியுள்ளனர்.
எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அவர் சினிமாவுக்காக அணியும் கவரிங் நகைகளை கூட விடாமல் எடுத்து அது தங்கமா, கவரிங்கா என பார்த்துள்ளனர். இதையடுத்து தனது குழந்தைகள் ஜாமன்ட்ரி பாக்ஸில் வைத்திருந்த ரூ 50 ஐ கூட அந்த கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். இது குறித்து தீபா அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது அவரது வீட்டருக்கே இருக்கும் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
நகைகளை வீட்டில் வைக்காமல் தீபா வேறு இடத்தில் வைத்திருந்ததால் அவை தப்பித்தன. தற்போது பட்டப்பகலில் கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்காகத்தான் காவல் துறையினர் வீடுகளில் சிசிடிவி கேமராவை வைக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்கள். அது போல் சாவிகளை வீடுகளில் மறைத்து வைக்காமல் கையோடு எடுத்துச் செல்லுமாறும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications