கரூர் விஜய் கேஸ்.. அஜய் ரஸ்தோகி கைக்கு போன சிபிஐ ஸ்பெஷல் ரிப்போர்ட்! யார் இவர்? இப்படி ஒரு பின்னணியா
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த குழுவிடம் கரூர் வழக்கின் முதல் கட்ட ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி இந்த ரிப்போர்ட்டை ஆய்வு செய்வார். கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணையின் போது இவரின் பதில் ரிப்போர்ட் தாக்கல் செய்யப்படும்.

யார் இந்த முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி
முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்தார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகியின் வழியில், 1982ஆம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார்.
வழக்கறிஞராக, நீதிபதி ரஸ்தோகி பல சட்டப் பிரிவுகளில் பணியாற்றினார். அதே சமயம், அவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சேவைச் சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். 1990ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். 1999 முதல் 2000 வரை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, 2013ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வரை மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், இந்த ஆணையம் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திடமிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
குஜராத் வழக்கில் அஜஸ் ரஸ்தோகி தந்த தீர்ப்பு
2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு, குஜராத் மாநிலம் நவீன இந்திய வரலாற்றில் மிகவும் கொடூரமான மத வன்முறைக் காட்சிகளில் ஒன்றைக் கண்டது. மாநிலம் முழுவதும் பெரும் கலவரங்கள் வெடித்தன; பல இந்துத்துவ அமைப்புகள் முஸ்லிம் சமூகங்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தின. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
எண்ணற்ற பாதிக்கப்பட்டவர்களில், பில்கிஸ் பானுவும். பில்கிஸ் பானு வழக்கு அந்தக் காலத்தின் மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் மனதை உருக வைக்கும் கதைகளில் ஒன்றாகத் தனித்து நின்றது.
பில்கிஸ் பானு வழக்கு
ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வன்முறையிலிருந்து தப்பியோட முயன்ற அவரது மூன்று வயது மகள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 14 உறுப்பினர்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குப் பிறகு பல மணி நேரம் மயக்கமடைந்திருந்த பில்கிஸ், சுயநினைவு பெற்றதும், அருகிலிருந்த பழங்குடிப் பெண்களிடமிருந்து சில ஆடைகளைப் பெற்று, பின்னர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். இது நீதி கேட்டு அவர் நடத்திய நீண்ட, வலியான சட்டப் போராட்டத்தின் தொடக்கமாயிற்று.
அஜய் ரஸ்தோகி தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ராதேஷியாம் ஷா, முன்கூட்டியே விடுதலை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் விக்ரம் நாத் அடங்கிய அமர்வு, குற்றம் குஜராத்தில் நடந்ததால், தண்டனைக் குறைப்பு அல்லது முன்கூட்டியே விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று தீர்ப்பளித்தது.
இந்த வழிகாட்டுதலைத் தொடர்ந்து, குஜராத் ஒரு குழுவை அமைத்தது, அக்குழு 11 குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விடுதலை செய்யப் பரிந்துரைத்தது, இது அவர்களுக்கு முன்கூட்டியே சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது.
விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள்
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் 2022 இல், பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் விடுதலை செய்ய குஜராத் அரசு முடிவு செய்தது. அவர்கள் நன்னடத்தையை கொண்டு இருந்தார்கள் என்று கூறி விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்கள் சுமார் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள் என்றும் இந்த உத்தரவில் கூறப்பட்டது. அவர்களின் விடுதலை இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாலைகள், இனிப்புகள் மற்றும் கொண்டாட்ட சடங்குகளுடன் வரவேற்கப்பட்ட காட்சிகள், பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் துன்பங்களுக்கு முற்றிலும் உணர்ச்சியற்றதாகக் காணப்பட்டன. இந்த விடுதலைக்கு அப்போது நீதிபதியாக இருந்த அஜய் ரஸ்தோகி கொடுத்த தீர்ப்பு முக்கியமானதாக இருந்தது.
ஆனால், பில்கிஸ் பானு மனம் தளரவில்லை. குஜராத் அரசின் முடிவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடினார். இது அநீதியானது என்றும், நியாயம் மற்றும் நீதியின் கொள்கைகளை மீறியது என்றும் வாதிட்டார். ஜனவரி 2024 இல், நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய புதிய அமர்வு, முந்தைய உத்தரவை ரத்து செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக் குறைப்பை ரத்து செய்தது. குறிப்பிடத்தக்கது.
முக்கிய தீர்ப்புகளை வழங்கிய அஜய் ரஸ்தோகி
2014ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், 2018ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி திரிபுரா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இந்த பதவி உயர்வு வரை அவர் அப்பதவியில் நீடித்தார். முன்னதாக, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.
நீதிபதி அஜய் ரஸ்தோகி 2018ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். நீதிபதியாக பல முக்கிய தீர்ப்புகளை வழங்கி உள்ளார். பெண் நேவி ஊழியர்களுக்கு கட்டாய கமிஷன், ஐஏஎஸ் தேர்விற்கான வயது வரம்பை நீக்க முடியாது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி வழங்கலாம் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications