ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு அவசர அறிவிப்பு.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய குட்நியூஸ்
சென்னை: மத்திய அரசு ஊழியர்களாக இருந்து ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரு முக்கியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும், மாதாந்திர ஓய்வூதியப் பணம் வரவு வைக்கப்பட்ட பிறகு, தவறாமல் ஒரு 'ஓய்வூதியப் பட்டுவாடா சீட்டை' அனைத்துப் பயனாளர்களுக்கும் அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு மீண்டும் ஒருமுறை மிகத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.
பல ஓய்வூதியதாரர்கள், தங்களுக்கு மாதாந்திர பென்ஷன் சீட்டு கிடைப்பதே இல்லை என்று தொடர்ச்சியாகப் புகார்களை மத்திய அரசிடம் கூறி வந்தனர். இதையடுத்து ஓய்வூதியப் பட்டுவாடா சீட்டு முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஓய்வூதியப் பட்டுவாடா சீட்டு என்பது வெறும் தகவல் அல்ல; இதில் தான் ஓய்வூதியத் தொகை, பிடித்தங்கள், டியர்னஸ் அலவன்ஸ் மற்றும் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தால் அதன் விவரம், மற்றும் நிலுவைத் தொகை போன்ற முக்கியமான நிதி விவரங்கள் இடம் பெற்று இருக்கும். இந்த விவரங்கள், ஓய்வூதியதாரர்கள் தங்கள் நிதி நிலைமையைத் திட்டமிடவும், வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்யவும் மிகவும் அத்தியாவசியமானது ஆகும்.
வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்
இது தொடர்பாக மத்திய அரசின் பென்ஷன் கணக்கு அலுவலகம் மற்றும் செலவுத் துறை ஆகியவை வங்கிகளுக்குப் பிறப்பித்துள்ள உத்தரவின் முக்கிய அம்சங்கள்:
ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டவுடன், உடனடியாக ஓய்வூதியச் சீட்டை வழங்க வேண்டும். இது ஒரு கட்டாயச் சேவையாகும். விருப்பத்தேர்வு அல்ல.
வங்கி கிளையில் கொடுப்பதைத் தாண்டி, மின்னஞ்சல் , பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS, மற்றும் வாட்ஸ்அப் போன்ற அனைத்து மின்னணு வழிகளையும் பயன்படுத்தி இந்த சீட்டைக் கட்டாயம் அனுப்ப வேண்டும்.
எளிதில் படிக்கக்கூடிய வடிவம்:
ஓய்வூதியப் பட்டுவாடா சீட்டை முதியோர் மற்றும் அனைத்து வயதினரும் எளிதில் படிக்கும் வகையில், தெளிவான வடிவமைப்பு மற்றும் எழுத்துருக்களில் சீட்டுகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை பொறுத்தவரை ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிமையாக்க மத்திய அரசு எடுத்திருக்கும் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவின் மூலம், மாதந்தோறும் தங்கள் பென்ஷன் கணக்கில் என்ன நடந்தது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் உரிமை ஓய்வூதியதாரர்களுக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு நிம்மதியாக ஓய்வூதியம் குறித்த தகவல்களை எளிதாக அறிந்து கொள்ள முடியும். வங்கிகளில் போய் நின்று கஷ்டப்பட வேண்டியது இருக்காது.












Click it and Unblock the Notifications