மதுரைக்கு மெட்ரோ வருமா? வராதா? மத்திய அரசு பரிந்துரைத்தது என்ன? அப்போ திமுக ஆர்ப்பாட்டம் செய்ததே!
சென்னை: மதுரைக்கு மெட்ரோ ரயில் வருவது சந்தேகம்தான் என்றும் 'மெட்ரோ லைட்' அல்லது 'BRTS' சிறந்தது என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையும் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மதுரை மெட்ரோ குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ் ரயில் செய்திகள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மதுரைக்கு மெட்ரோ ரயில் வருவது சந்தேகம்? 'மெட்ரோ லைட்' அல்லது 'BRTS' சிறந்தது என மத்திய அரசு பரிந்துரை!

கோயில் மாநகரான மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. மதுரைக்கு மெட்ரோ ரயில் அமைப்பதை விட, பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு (BRTS) போன்ற மாற்றுத் திட்டங்களே சிறந்தது என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்
BRTS திட்டமே போதுமானது:மதுரை நகரின் தற்போதைய பயணிகளின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசலை ஆய்வு செய்ததில், அங்கு அதிக செலவு பிடிக்கும் மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை என்றும், அதற்கு பதிலாக குறைவான செலவில் அமைக்கக் கூடிய 'பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு' (Bus Rapid Transit System - BRTS) போதுமானது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
மக்கள் தொகை குறைவு
மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த ஒரு நகரத்தின் மக்கள் தொகை குறைந்தபட்சம் 20 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால், 2011 கணக்கெடுப்பின்படி மதுரை நகர மக்கள் தொகை சுமார் 15 லட்சம் மட்டுமே. இது மெட்ரோ கொள்கை 2017-ன் விதிகளுக்குப் பொருந்தவில்லை.
அதிக செலவு
மெட்ரோ ரயில் திட்டங்கள் அதிக நிதி முதலீடு தேவைப்படுபவை. மதுரையின் தற்போதைய சூழலுக்கு இவ்வளவு பெரிய முதலீடு பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இருக்காது என மத்திய அரசு கருதுகிறது.
மெட்ரோ திட்டம்
இதனால், மதுரைக்கான மெட்ரோ திட்டம் கைவிடப்பட்டு, அதற்கு மாற்றாக மெட்ரோ நியோ (Metro Neo) அல்லது மேம்படுத்தப்பட்ட பேருந்து வசதிகள் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக அரசு இது குறித்து அடுத்து என்ன முடிவு எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக ஆர்ப்பாட்டம்
மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம் கோரி திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். அதன் புகைப்படங்களை வெளியிட்டு தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: #AIIMS-உம் வராது, #MetroRail-ஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்...
அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications